பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

ஓடிவிட்டாள். வெளியே அவளுக்காகக் காத்திருந்த காஞ்சனமாலையோடு வேகமாக அந்தப்புரம் சென்றுவிட்டாள் அவள். உதயணன் திடுக்கிட்டான். திகைப்பு அவனை அப்படியே சிலைபோல நிற்கும்படி செய்துவிட்டது. அடுத்தகணம் தான் இனி அங்கே நிற்பதும் அபாயம் எனக் கருதி, அவனும் ஓடிச்சென்று பக்கத்தில் இருந்த வேறு ஓர் மண்டபத்தில் ஒளிந்து கொண்டான். அவன் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. ‘தத்தைக்கு இந்த உண்மை தெரிந்ததன் விளைவு என்ன ஆகுமோ?’ என்று அவன் மனம் பதைபதைப்பு அடைந்தது. வெகு நேரம் அந்த மண்டபத்திலேயே இருந்து சிந்தித்தபின், அவன் தன் சயனஅறைக்குச் சென்றான். மறுநாள் பொழுது விடிந்தது. வாசவதத்தை துயிலெழுந்ததும் முதல் வேலையாக மானனீகையைக் காவல் வைத்திருந்த இடத்திற்குள் சென்று தன் ஆத்திரத்தை அவள் மேல் காட்டுவது என்று புறப்பட்டாள். மானனீகையைக் காவல் வைத்திருந்த இடத்திற்குச் சென்றதும், “அடி நன்றி கெட்டவளே! இருந்திருந்தும் எனக்கே துரோகம் செய்வதற்குத் துணிந்துவிட்டாயா? கூத்தப்பள்ளியில் நள்ளிரவில் நாடகமா ஆடுகின்றாய்? அரசனோடு அங்கே போய் ஏது செய்தாயடி? என்ன சொல்லி அவரை மயக்கினாய்?” என்று ஆத்திரத்தோடு உரத்த குரலில் வினவினாள். வாசவதத்தை சில பணிப் பெண்களை அழைத்து, மானனீகையை அங்கிருந்து சித்திரத் தூண் ஒன்றில் கட்டி வைக்கும்படி கட்டளையிட்டாள். உடனே மானனீகை பலவந்தமாகத் தூணுடனே சேர்த்து வைத்துக் கட்டப்பட்டாள்.

‘அவளை எந்த வகையிலும் அவமானப்படுத்திவிட வேண்டும்’ என்ற குரோத உணர்ச்சி வாசவதத்தையின் மனத்தில் கொதித்து எழுந்திருந்தது. உதயணனை மயக்கக் காரணமாக இருந்த மானனீகையின் அழகைச் சிதைத்து அழித்துவிட வேண்டும் என்று தோன்றியது தத்தைக்கு. பக்கத்தில் இருந்த பணிப் பெண்ணை அழைத்து, “இந்தத் துரோகியின் தலை மயிரைக் கத்தரித்து இவள் அழகை