பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விரிசிகை திருமணம்

387

விரிசிகையின் அழகிய கருங்குழலுக்கு நறு நெய்பூசிப் பல வகை வாசனைப் பொருள்களால் நீராட்டினர். நீராட்டி முடிந்த பின்னர், அழகுக்கு அழகு செய்வதேபோல அவளை அணி செய்யத் தொடங்கினார்கள். பலவகை நறுமண மலர்களால் தொடுத்த பூங்கொத்துக்களை அவள் கூந்தலில் அணிந்தனர். சிறந்த உடைகள், அணிகலன்கள் முதலியவற்றைக் கொண்டு விரிசிகையைப் புனையா ஓவியமாகச் செய்தனர். இயற்கை தன் உடலில் ஊட்டியிருந்த வனப்பைத் தவிர, அது காறும் செயற்கை வனப்புக்கு உரிய எந்த அணிகளையும் பயன்படுத்தி அறியாத விரிசிகைக்கு அலங்காரம் செய்த பெண்கள், இயற்கை வனப்போடு செயற்கை வனப்பையும் அவளுக்கு அளித்தனர். விரிசிகையின் அலங்காரம் முடிந்தது. அரண்மனையிலிருந்து அவளை வீதிகளின் வழியே நடத்தி அழைத்துச் செல்வதற்கு வந்தவர்கள் காத்திருந்தனர். புறப்பட வேண்டிய நேரத்தில், அழகான பெரிய செங்குவளை மலர் ஒன்றை, வலக்கையில் பிடித்துக் கொள்க’ என்று கூறி விரிசிகையிடம் கொண்டு வந்து அளித்தாள் ஒரு தோழி. விரிசிகை அந்த மலரை வாங்கி வலக்கையில் பிடித்துக் கொண்டாள். அது அவளுடைய சோபையைப் பன்மடங்கு எடுப்பாக விளங்கச் செய்தது.

தவப்பள்ளியிலிருந்து உடன் வந்திருந்த பெண்கள் அங்கிருந்தே விடை பெற்றுக்கொண்டு திரும்பிச் செல்வதற்கு விரும்பினார்கள். நகருக்குள் வருவதற்கு அந்தப் பெண்கள் விரும்பவில்லை. அரண்மனையிலிருந்து விரிசிகையை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தவர்களுக்குள் சாங்கியத்தாயும் இருந்தாள். தவப்பள்ளியிலிருந்து உடன் வந்திருந்த பெண்கள், “சாங்கியத் தாயே! நாங்கள் இங்கிருந்தே விடை பெற்றுக் கொள்கிறோம். விரிசிகையை அரண்மனையில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியது, இனி உங்கள் பொறுப்பு” என்று அவளிடம் வேண்டிக்கொண்டனர். விரிசிகையை நோக்கி, “விரிசிகை! உதயணனின் பிற மனைவியர்களாகிய தத்தை, பதுமை, மானனீகை ஆகியோர்