பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

வாய்த்தது. கோசாம்பி நகரத்து மக்களும் அமைதியான நல்லாட்சியுற்றனர். கோசாம்பி நகரத்து அரண்மனையிலே நிறைந்த நல்வாழ்வின் போக அமைதி பரவித் திகழ்ந்தது.

73. ஆசை பிறந்தது

விரிசிகை-உதயணன் திருமணம் நிகழ்ந்தபின், கோசாம்பி நகரத்து அரண்மனையின் வாழ்க்கை இன்பமும் அமைதியுமாகப் பல ஆண்டுகள் கழிந்து கொண்டிருந்தன. இன்பமும் அமைதியுமாகக் கழிந்த அந்தப் பல வருடங்களுக்கு நுடுவே நிகழ்ந்த எல்லா நிகழ்ச்சிகளும் கதைப்போக்கிற்கு அவசியமில்லை யாயினும் சில இன்றியமையாத நிகழ்ச்சிகளை அவசியம் குறிப்பாக அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உதயணனின் தலைசிறந்த நண்பர்களாகிய யூகி, வயந்தகன், இடவகன் முதலியவர்களுக்கு திருமணம் ஆகியிருந்தது. முதலாவதாகக் குறிப்பிட வேண்டிய செய்தி இது. பல ஆண்டுகள் தானும் தன் மனைவியுமாகக் கோசாம்பி நகரத்திலேயே தங்கியிருந்த யூகிக்கு, மீண்டும் தான் அவனைக் கண்டு அளவளாவ விரும்புவதாகவும், அவன் உடனே வரவேண்டும் என்றும் பிரச்சோதனனிடமிருந்து அழைப்பு வந்தது. உதயணனின் அனுமதி பெற்றுத் தன் மனைவியைக் கோசாம்பியிலேயே விட்டுவிட்டுத் தான் மட்டும் உஞ்சை நகருக்குச் சென்றான் யூகி. இவ்வாறு சென்று திரும்பிய பின்னரும், இடையிடையே கோசாம்பியிலும் உஞ்சையிலுமாக யூகி மாறிமாறி இருந்தான். மற்ற நண்பர்கள் தத்தம் மனைவிமாரோடு கோசாம்பியிலேயே உதயணனுக்குத் துணையாகத் தங்கியிருந்தனர். தானே முன்பு இலாவாணத்துக்கு அனுப்பி இருந்த உருமண்ணுவாவையும் இப்போது தன்னிடம் வரவழைத்து வைத்துக் கொண்டிருந்தான் உதயணன். எனவே உருமண்ணுவாவும் தன் மனைவி இராசனையுடனே கோசாம்பி நகரத்தில் வந்து தங்கியிருந்தான். இந்த நிலையில்தான் உதயணனின் வாழ்க்கையில் ஐந்தாவது பகுதியாக அவன் மகன் நரவாண தத்தனின் தோற்றமும் வளர்ச்சியும் தொடங்குகிறது.