பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாசவதத்தையின் மயற்கை

395

கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானித்துவிட்டான் உதயணன். மெல்ல அவள் அருகில் சென்று அமர்ந்து, பரிவோடு கூந்தலைக் கோதியவாறே வாட்டத்திற்குக் காரணம் என்ன என்பதை வினவினான். தத்தையின் குறிப்பான மறுமொழியிலிருந்து, அன்று அரசவையில் நிகழ்ந்த வழக்கினால் தனக்கு ஏற்பட்ட ஏக்கம் எதுவோ அதுவேதான் அவளுக்கும் அப்போது ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து வியந்தான் உதயணன். தண்ணீர் வேட்கையால் தவிப்பவன், தனக்கு எதிரே குடம் நிறையத் தண்ணீருடனே ஒருவர் வருவதைக் காண்பது போலிருந்தது, உதயணனுக்கும் தத்தைக்கும் ஏற்பட்ட இந்த எண்ண ஒற்றுமை! தங்களுக்கு மக்கட் செல்வம் இல்லாத குறையை மனம் விட்டுப் பேசிக் கொண்டு துயரச் சுமையைக் குறைத்து ஆறுதலடைந்தனர் அவர்கள். ஆறுதல் ஆர்வத்தையும் விளைவித்தது! அதன் பின்பு என்ன? அன்று இரவு கோசாம்பி நகரத்தில் தத்தையின் அந்தப்புரத்தில் மாடத்தின்மேலே காய்ந்த நிலவு வீண் போகவில்லை! இரவு வீண் போகவில்லை!

அந்த இனிய இரவில் உதயணன் ஓர் அழகிய கனவு கண்டான். விரும்பத் தகுந்ததான ஓர் இன்பக் கனவு அது நடுயாமத்து இரவின் கடுமையை விலக்கிக் கொண்டு ஒளிமயமான அழகுடனே தெய்வ நங்கை ஒருத்தி உதயணன் முன் தோன்றினாள். “எங்கள் அரசனாகிய குபேரன் உம்மை அழைத்து வருமாறு என்னை இங்கே அனுப்பினான்” என்று அந்தத் தெய்வீகப் பேரழகு பெண் அவனை நோக்கிக் கூறினாள். “என் கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையும் என்னுடன் அங்கே வருவாள்! இதற்குச் சம்மதமானால் நான் உங்கள் அரசனின் அழைப்பை இப்பொழுதே ஏற்றுக் கொள்ளுகின்றேன்” என்று உதயணன் அவளுக்குப் பதில் சொன்னான். அந்தத் தெய்வீக நங்கையும் அதற்குச் சம்மதித்து அவனையும் தத்தையையும் தன்னுடன் குபேரனின் நகராகிய அளகாபுரிக்கு அழைத்துக்கொண்டு சென்றாள். அளகாபுரி நகரை அடைந்து குபேரனின் அவைக்குள் உதயணனும் தத்தையும் நுழைந்தபோது அரியணையில் வீற்றிருந்த