பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

இயந்திரம் ஒன்றை உங்களால் இயற்ற முடியுமா?’ என்று கேட்டு வந்தனர். ஆனால், அவ்வாறு அழைக்கப்பட்டு வந்த தச்சர்களில் எவரும் தங்களால் அதைச் செய்வது சாத்தியமில்லை என்றே கூறினர். எல்லாரும் அது முடியாத காரியம் என்று சொல்லி ஒருமுகமாக கையை விரித்துவிட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில், உதயணன் தன்னை எண்ணித் தன் உதவியை நாடுகின்றான் என்பதைப் பத்திராபதி உணர்ந்தாள். உடனே தான் சென்று உதயணனுக்கு உதவவேண்டும் என்ற அவா அவளுக்கு ஏற்பட்டது. இளமையான தச்சன் ஒருவனைப்போலத் தன் உருவத்தை மாற்றிக்கொண்டு உடனே உதயணனைச் சந்திக்கக் கோசாம்பி நகருக்குப் புறப்பட்டாள் பத்திராபதி. ‘ஒரு காலத்தில் தனக்கு நிரம்ப உதவி செய்தவனுக்கு, இன்று தானே உதவி செய்வதற்குச் செல்கிறோம்’ என்றெண்ணி பெருமிதம் கொண்டு மகிழ்ந்தாள் அவள்.

76. புதல்வன் பிறந்தான்

கோசாம்பி நகரத்துக்கு வந்து இளந்தச்சன் உருவத்தோடு அரண்மனை வாயிலில் நுழைந்த பத்திராபதி, முதலில் உருமண்ணுவாவைச் சந்தித்தாள். தச்சுவேலை செய்யக் கூடிய திறமை வாய்ந்த இளம் ஆண்மகனைப் போன்ற தோற்றத்தில் வந்துள்ளவனைக் கண்டு மனமகிழ்ந்த உருமண்ணுவா, உடனே உதயணனிடம் சென்று கூறினான். “அரசே! இப்போது வந்திருக்கும் தச்சுவினை இளைஞன், சிறந்த கலை வல்லான்போல் விளங்குகின்றான். இவனைப் பார்த்ததிலிருந்து நம் விருப்பத்தை இவனால் நிச்சயமாக நிறைவேற்ற முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இவன் இதற்காக எவ்வளவு சன்மானம் கேட்டாலும் நாம் கொடுத்து விடலாம்” என்று கூறிய உருமண்ணுவாவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்ட உதயணன், உடனே அந்தத் தச்சனை அழைத்து வருமாறு பணித்தார். தச்சன் அழைத்து வரப்பட்டான்.

உதயணனும் உருமண்ணுவாவும் வாசவதத்தையின் ஆசையை விவரித்து, அதற்கேற்றபடி ‘பறக்கும் இயந்