பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மதனமஞ்சிகை எங்கே?

419

அவள். எனவே கோமுகன் அவள் கூறுவதிலும் ஒரு விதமான உண்மையும் பொருத்தமும் அடங்கியிருத்தலை உணர்ந்து கொள்ள முடிந்தது. ‘தானும் நரவாணனும்கூட அதுவரை அரசர் உதயணனிடம் அதைக் கூறாமலிருந்தது தவற்றுக்குரியதே’ என்றும் எண்ணி வருந்தினான் கோமுகன். ஆகவே அரசரிடம் அனுமதி பெற்றுக்கொண்ட பின்பு மீண்டும் அங்கே வருவதாகக் கலிங்கசேனையிடம் கூறிவிட்டுப் புறப்பட்டான் அவன். புறப்பட்டபின் அங்கிருந்து நேரே அரண்மனைக்குச் சென்ற கோமுகன், உதயணனைச் சந்தித்துக் கூற வேண்டியவற்றைக் குறிப்பாகவும் அமைதியாகவும் கூறினான்.

உதயணன் எல்லாவற்றையும் கேட்டுப் புன்முறுவலோடு “இளமை நெஞ்சங்களுக்கு இத்தகைய காதலுணர்ச்சி இயற்கைதான்! நரவாணனுக்கு மதனமஞ்சிகையினிடம் இத்தகைய கவர்ச்சியும் உள்ளத் தொடர்பும் ஏற்பட்டிருப்பது மெய்யானால் நீ செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் பொருத்தமானவைகளே. நான் இவற்றை மறுக்கவில்லை” என்று கோமுகனுக்கு இணங்கி மறுமொழி கூறினான் உதயணன். உடனே, வாசவதத்தையின் அந்தப்புரம் சென்று, அவளிடமும் அன்று நிகழ்ந்தவற்றை விவரித்தான் அவளும் தன் மகன் நரவாணன், மதனமஞ்சிகையை மணந்து கொள்வதற்குத் தன்னுடைய முழு உடன்பாட்டையும் அளித்தாள். நரவாணன்-மதனமஞ்சிகை திருமணத்திற்கு உதயணன், வாசவதத்தை ஆகிய இரு முதுகுரவரின் சம்மதத்தையும் பெற்றுக்கொண்டு மீண்டான் கோமுகன், உதயணனும் நரவாணனுக்குத் தந்தை என்ற முறையில் மதனமஞ்சிகைக்கு மேலும் பல திருமணப் பரிசங்களை அனுப்பினான்.

விரைவில் ஒரு மங்கலத் திருநாளில் நரவாணன்-மதன மஞ்சிகை ஆகிய இருவர் மனோரதமும் நிறைவேறியது. இன்ப வாழ்க்கை என்ற சுவைமிக்க இலக்கியத்தில் ஈடுபட்டு மகிழலாயினர் அவர்கள். புதிய காதல் வாழ்வின் தொடக்கம் என்பதே, ஒரு புதிய இலக்கியத்தைக் கற்பது போலத்தானே! அந்த இலக்கியத்தை மதனம்ஞ்சிகையும் நரவாணனும் கற்கலாயினர்.