பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புண்ணிய விளைவுகள்

429

மகள் அநங்க விலாசினியை மணந்துகொள்ள வேண்டும்” என்று பிரார்த்தித்தான் நீலவேகன்.

நரவாணனும் அந்த வேண்டுகோளுக்கு இணங்கி அநங்க விலாசினியை மணந்து கொண்டு அவளோடு அங்கே சில நாள்கள் தங்கினான். அவ்வாறு அவன் கந்தருவபுரத்தில் தங்கியிருந்தபோது அவனுடைய புண்ணியப் பெரும்பலன்கள் ஒன்று ஒன்றாக விளையத் தொடங்கின. இந்திரனுடைய ஏவலினால் தேவர்களும் தேவருலகத்தைச் சேர்ந்த அரசர்களும் நரவாணனைக் கண்டு வணங்கி அவனுக்கு மிகுந்த பரிசில்களையும் நவநிதிகளையும் திறைகளையும் மன முவந்து கொடுத்து விட்டுச் சென்றனர். இதையெல்லாம் கண்ட மானசவேகனும் மிகவும் அச்சங்கொண்டு கந்தருவபுரத்துக்கு ஓடோடியும் வந்தான்.

நரவாணனிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மதனமஞ்சிகையை அவனிடம் ஒப்படைத்தான். தன் தங்கை வேகவதியையும் நரவாணனுக்கே மணம் முடித்துக் கொடுத்தான். தன்னைப் பிரிந்து வாட்டமுற்றிருந்த மதனமஞ்சிகை, வேகவதி இருவருக்கும் ஆறுதல் கூறி ஏற்றுக் கொண்டான் நரவாணன். இவ்வாறிருக்கும்போது அவனுடைய புண்ணிய பலத்தினால் வித்தியாதரர் உலகத்தின் ஆட்சிப் பொறுப்பு நரவாணனிடம் வந்து சேர்ந்தது. நரவாணன் மணி முடி சூடிப் பேரரசனானான். தேவியர் மூவருடனும் தேவருலகை ஆண்டு வந்த அவன், இடையே பெற்றோரைக் காண வேண்டுமென்ற ஆசை உந்தியதனால் கோசம்பி சென்று சில நாள் தன் மனைவியருடனும் பிற பரிவாரத்தினருடனும் தங்கி வந்தான். அவன் கோசாம்பியிலிருந்து திரும்புகிறபோது தனக்குப் பதிலாகத் தன் தம்பியும் தன் தந்தையின் மற்றொரு மனைவியான பதுமையின் புதல்வனுமாகிய கோமுகனைக் கோசாம்பியின் இளவரசனாக நியமித்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கொண்டான், தன் தந்தையாகிய உதயணனிடம்.

உதயணனும் தன் புதல்வனின் அந்த வேண்டுகோளுக்கு இணங்கி விடை கொடுத்தான். பின்பு நரவாண தத்தன்