பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கூடாதல்லவா? எனவே மனந்தேறி மேலே சென்றனர். வேகத்தில் விளைந்த சோகங்களை வேகத்தாலேயே மறக்க முயன்றான் உதயணன்.

17. பிடியின் வீழ்ச்சி

கோடபதியை இழந்த துயரத்தை மறக்க அவர்கள் முயன்று கொண்டிருக்கும்போது வேறோர் புதிய துயரம் புகுந்து வாட்டியது. எண்பதெல்லை அளவு ஓடியபின் பிடி மெலிவடைந்து தளர்ந்தது. பிடியின் நடையில் வேகம் குறைந்தது. கால்களும் துதிக்கையும் விதிர் விதிர்ப்பத் தள்ளாடியது பத்திராபதி. அதன் நிலையை உய்த்துணர்ந்த உதயணன் பாலை நிலத்தில் எஞ்சியுள்ள இருபது எல்லைத் தொலைவும் எப்படியாவது அதைக் கொண்டே கடந்துவிட வேண்டும் என்று எண்ணித் துரிதப்படுத்தினான். இப்போதோ, இன்னும் சற்று நேரத்திலோ பிடி இறந்து போவது உறுதி என்பதையும் அங்கை நெல்லியென அவன் அறிந்தான்.

யானைகளின் இயல்பைப் பல நூல்களின் வாயிலாகத் தேர்ந்திருந்த உதயணன், இந்த உண்மையை அறிந்திருந்தது வியப்பிற்குரிய செய்தி அல்ல. ஆனால், செத்துக்கொண்டிருக்கும் அந்தப் பிடியின் துணைகொண்டே பாலை நிலத்தையும் கடந்து பிரசோதனனுடைய நாட்டு எல்லையையும் நீங்கியதுதான் வியப்பிற்கு உரியது. பிடியைப் பற்றியிருந்த நோய் ‘காலகூடம்’ என்னும் கடுநோயாகையால் இனிமேல் அது பிழைக்க எவ் வகையிலும் வழியே இல்லை. பிரச்சோதனனுடைய நாடாகிய ஐந்நூற்றெல்லை நில அளவையும் கடந்து நோயின் கடுமை மிகுந்த பிடி, ‘யான் இனி உயிர் விடுவேன். நின்னுயிர்க்கு ஏதும் துன்பம் நேராமல் காத்துக் கொணர்ந்து விட்டேன். சுகமாக நீ இனி மேலே செல்லலாம்’ என்று கூறுவதுபோலத் தன் உடல் வெடவெடக்கச் சோர்வு எய்தி நின்றது.