பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நெருங்கிய துன்பம்

85

விட்டனர். அங்கே சுற்றித் சுற்றித் தேடினர். அப்போது பொய்கைக்கு எதிரே இலவம் புதரின் வாயிலில் நின்று கொண்டிருந்த உதயணனைச் சிலர் பார்த்து விட்டனர். “அதோ அதோ, அகப்பட்டுக் கொண்டான்” என்ற கூக்குரலுடன் இலவம் புதரைச் சூழ்ந்துகொண்டு தாக்க ஆரம்பித்தனர் வேடர். உதயணன் தன்னை எதிர்த்துச் சூழும் பகைவரை வில் முனையில் அம்பு மழை பொழிந்து விரட்ட ஆரம்பிக்கும்முன் புதருக்குள் ஒருமுறை திரும்பிப் பார்த்தான். ஒன்றும் புரியாத கலவரத்துடனே கண்களில் அச்சம் ஒளிர நடுக்கத்தோடு வெளியே நோக்கிக் கொண்டிருந்த தத்தையைக் காக்கும்படி, உள்ளே உடனிருந்த காஞ்சனைக்குக் கூறிவிட்டு வில்லை வளைத்தான் உதயணன்.

எதிர்த்த வேடர், இது கண்டு திகைத்து நின்றனர். திகைப்பு ஒருபுறம் இருந்தாலும் எளிதாகக் கையில் சிக்கிய கொள்ளையை விட்டுவிட அவர்கள் விரும்பவும் இல்லை. தனியொருவனாக நின்ற உதயணனை நெருங்கி எதிர்த்து வெற்றி கொள்ள முயன்றார்கள். “யானை இறந்து போனதும் இங்கிருந்து தப்பி நாடு சென்றுவிடலாம் என்று கருதினாய் போலும்! நீ எப்படிப் போய்விட முடியும்? உன் உயிரை உண்ணாமல் உன்னை விட்டுவிட மாட்டோம். மரியாதையாக நீ யார் என்பதைச் சொல்லிவிடு” என்று கூறிக்கொண்டே அவனை வாட்ட ஆரம்பித்தது வேட்டுவர் கூட்டம்.

அவர்கள் செய்த வெந்துயர்களுக்கும் கேட்ட கேள்விகளுக்கும் உதயணன் வாய் திறந்து பதில் சொல்லவே இல்லை; அவன் கையிலிருந்த வில்லே விடை கூறிக் கொண்டிருந்தது. அந்த வீர வில்லிலிருந்து நொடிக்கு நொடி பறந்து கொண்டிருந்த அம்புகள் வேடரில் பலரை விண்ணுக்கு அனுப்பிவைத்தன. சமயமும் சூழ்நிலையும் எதிர்பாராத துன்பங்களைத் தரும்போது, எதிர்பாராத துணிவையும் மனிதனுக்குக் கொடுத்து விடுகின்றன. கொலைக் கொடுமைகளுக்குத் தன்நிகரற்ற காட்டு வேடர்களை ஒற்றை மனிதனாக நின்று எதிர்க்கும் ஆற்றலும் உதயணனுக்கு அப்படித்தான்