பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19. வேடர் கேடுகள்

ற்றவர்கள் தன்னைத் திட்டுவதிலிருந்து தப்ப ஒரு வழி கண்ட நிமித்திகன், அதைக் கூறினான். மிக நெருக்கமாக வளைத்துக்கொண்டு தாக்கியதனால், இலவம் புதருக்குள்ளே மறைந்து இருந்த தத்தையும் காஞ்சனையும் வேடர்கள் கண்களுக்குத் தெரிந்துவிட்டனர். அப்படித் தெரிந்து கொண்டவர்களில் அந்த முதிய நிமித்திகனும் ஒருவன். “புதருக்குத் தீமூட்டி விட்டால் இவன் போரை நிறுத்தி விடுவான்” என்று உதயணனைச் சுட்டிக் காட்டிக் கூறினான் அந்த முதிய நிமித்திகன். தன்னை வைதவர்களிடமிருந்து தப்ப இந்த உபாயம்தான் அவனுக்கு வாய்த்தது. அந்த முடிவை யாவரும் ஏற்றுக் கொண்டனர்.

புதருக்குத் தீ வைக்குமாறு கூறிய நிமித்திகன் கூற்றை, வேடர் யாவரும் வரவேற்றனர். ஆயினும் நிமித்திகன் அதனை விளங்கக் கூறுகின்றவரை அவர்கள் செயற்பட்டார்களில்லை. ஏற்கெனவே உதயணன் தங்களை அம்புகளால் வாட்டியதனை நினைக்க நினைக்க அந்த நிமித்திகன்மேல் அவர்களுக்குச் சற்றே வெறுப்புணர்ச்சி தோன்றியிருந்தது. நிமித்திகன் தன் கூற்றை விவரிக்கத் தொடங்கினான். “இலவம் புதரைச் சுற்றித் தீ மூட்டிவிட்டால், உள்ளிருப்பவர்கள் எவ்வாறேனும் வெளிப்பட்டுத்தான் ஆகவேண்டும். அங்ஙனம் வெளிப்படுங்கால் நாம் அவர்களைச் சூழ்ந்து கொண்டு துன்புறுத்த முடியும்” என்று கூறிய பின்பே, நிமித்திகன் சொல்லில் அவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. கையிலிருந்த அரணிக் கோல்களைக் கடைந்து தீ மூட்ட முற்பட்டனர் காட்டு வேடர். காய்ந்து பஞ்சு போலிருந்த பூளைப் பூக்களை இடைமடுத்து, அரணிக் கோல்களை உரசிப் பழக்கமுள்ள அவர்கள் தீ உண்டாக்க வெகு நேரமாக வில்லை. “என் புள் நிமித்தம் ஒரு போதும் பொய்யாகாது” என்று சிறிது துணிவுடன் நிமித்திகன் இப்போது வாய்விட்டுச் சொன்னான்.