பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

‘கையில் படையேதும் அற்றவன்’ என்ற போர் அறமும் கருதாது கணைகளைத் தொடுத்தவண்ணமிருந்தனர் வேடர். வெற்று வில்லொன்றே துணையாக, அவர்கள் கணை மாரியைத் தன்னிலிருந்து சிறிது நேரம் விலக்கினான் உதயணன். அவனுடைய இந்த நிலையைக் கண்ட தத்தை, தன் மனத்தில் துயரத் துடிப்புடன் உள்ளங்கவர்ந்த கள்வன் உடலைத் துளைக்குமோ என்று அஞ்சும்படி வேடர் அம்புகளால் தாக்குகின்ற நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்தாள். ஏதோ நினைவு வந்தவள்போலத் தன் முன் கைகளையும் கழுத்தையும் பார்த்தாள். அவள் முகத்தில் நம்பிக்கை சிறிது மலர்ந்தது. தான் அணிந்திருந்த நகைகள் யாவற்றையும் கழற்றினாள். காஞ்சனையை அருகிலழைத்து அவற்றை உதயணன் மூலம் வேடர்கட்கு அளித்து அவர்களுடைய போரை நிறுத்துமாறு வேண்டிக்கொள்ளச் சொன்னாள். காஞ்சனை சற்றுத் தயங்கியபின் மறுமொழி கூறாமல் அவற்றை வாங்கிச்சென்று உதயணன் கையிற் கொடுத்தாள்.

காஞ்சனை விலை மதிப்புமிக்க அணிகலன்களை உதயணன் கையிற் கொடுப்பதையும் அவன் ஒன்றும் புரியாது திகைத்துத் தத்தையிருந்த பக்கம் திரும்பி நோக்குவதையும் கண்ட வேடர், அணிகளுக்கு ஆசைப்பட்டுப் போரைச் சிறிது தளர்த்தினர். தத்தையின் நடுக்கமும் துயர மனநிலையும் உதயணனுக்கு மிக விரைவிற் புலப்பட்டு விட்டன. நொடிக்கு நொடி துன்பம் மிகுந்து நெருக்கும்போது, நினைவுக்கு அளவு கடந்த நுண்மையும் வேகமும் கூர்மையும் எங்கிருந்தோ கிடைத்து விடுகின்றன. உதயணன் நினைவில் சிறியதோர் சூழ்ச்சி மிக விரைவில் உருவாகி விட்டது. அச்சூழ்ச்சியின் திட்டப்படி நடக்க அவன் தயாராயினன். தான் இன்னான் என்பதை உரையாமல் வேடர்களை நோக்கிக் கூறலானான். “காட்டு முழைகளிலுறையும் வலிய தோளையுடைய வேடர்களே, சற்று அருகே வந்து யான் கூறப் போவதைக் கேளுங்கள். பல பெரிய அணிகலப் பொருள்களை முயற்சியால் ஈட்டிப் பிடிமீது கொண்டு, இவ் வழியே