பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 வெளிச்சத்தை நோக்கி...

தோன்றும். யாராவது, அவரிடம் தம் பிரச்சினையைச் சொன்னால், வலது கைப் பெருவிரலை மூக்கடியில் வைத்து, ஆள்காட்டி விரலை, நெற்றிப் பொட்டில் வைத்து, நிதானமாக மூச்சுவிடுவார். பிறகு எதாவது பதிலளிப்பார், ரத்தினச் சுருக்கமாக, அவரிடம் ஏமாற்றுக்காரர்களும் போவதுண்டு. அந்நியோன்யமானவர்களும் போவதுண்டு. இவர் இப்படி என்று வாய் பேசாது. கண்கள் பேசும். புரிந்து கொள்ளக் கூடியவர்கள் புரிந்து கொள்ளலாம். அவர் நினைத்தால் எவ்வளவோ சம்பாதிக்கலாம்... ஆனால், இன்னும், தெரிந்தவர் வீட்டுத் திண்ணையை ஒட்டிய சின்ன அறையில்தான் இருக்கிறார்.

அவள் பிறந்த நாளிலிருந்தே, அவள் குடும்பத்துடன் தொடர்பு கொண்டவர். அவள் கல்யாணத்தைக்கூட வேண்டாம் என்று சொன்னார். 'அவளுக்கு என்ன அவசரம்' என்றார். அவசரம் அண்ணனுக்கு என்பதைக் கேட்க மறந்தாரோ... சொன்னால் கேட்க மாட்டான் என்று நினைத்தாரோ...

அவரையே பார்த்தபடி, தன்னை மறந்து, தன் கஷ்டத்தை மறந்து நின்றவளைப் பார்த்து, "என்னம்மா... வீட்ல யாரும் இல்லையா?” என்றார் பெரியவர்.

"அண்ணன் 'டூர்' போயிருக்கிறார். அண்ணி, கோவிலுக்கு.... இப்போ வந்திடுவாங்க... வாங்க, வந்து உட்காருங்க..."

அந்த முதியவர், சிறிது யோசிப்பவர்போல் நின்றார். பிறகு, அவளையே உற்றுப் பார்த்தார். பிறகு "ஒன் புருஷன்... ஏதாவது லெட்டர் போட்டானா என்றார். இப்போதுதான், அவர், அந்தப் பிரச்சினையைப் பற்றியே கேட்கிறார்.

சத்யா கண்கலங்க அவரைப் பார்த்தாள். புரிந்து கொண்டார்.

சத்யா அவர் கொடுத்த விபூதியைப் பயபக்தியுடன் வாங்கிக் கொண்டு, அவரையே பார்த்தாள். அவர், அந்தப்