பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்

மாமரம்


சுட்டுப் பொசுக்கத் துணிந்தன னோ வெனச்
சூரியனுச்சிக்கு மேலிருந்தே
மட்டு மிதமின்றிக் காயத் தொடங்கினன்
மதிப்புக் குரியவன் மாமரத்தை !

ஏழை யெளியவரில்லத்தில் பண்டம்
ஏதுமில்லாம லிருப்பதுபோல்
பாழுமவ் வானம் முழுவதும் வெறுமை
பரந்து பயத்தை யுறுத்தியது !

வீட்டில் குழந்தைகள் போட்ட இறைச்சலின்
வேதனை அத்துடன் சேர்ந்ததனால்,
தோட்டத்திலுள்ள என் மாமர நீழலில்
சோர்ந்துகண் மூடிப் படுத்திருந்தேன்.

சக்தி படைத்த மனிதனே என்றசொல்
சர்க்கரை யாக இனித்திடவே,
யுக்தி படைத்தஎன் மாமரம் கூப்பிட
'ஓ'வென நானெழுந்து ஏன் எனவும்,

பூந்தளிர் யாவும் கறுகிட நானும்
புலம்பியழுமிந்தப் போதினிலே
மாந்தர்களாகிய நீங்களெனக்கு
மழைபொழி வித்திட வேண்டு மென,

சிந்தை வருந்த உரைத்தது; நானுமென்
செல்வச் சிறப்பான மாமரமே !
இந்தத் தலைமுறை தன்னி லிருப்பவர்க்
கிம்மியு மில்லையிச் சக்தி யென்றேன்

இல்லையெனிற்பய னில்லை ; யினியெம்
மினத்தைவெட் டாம லிருந்துவிடின்,
நல்ல மழைபெய்து நாடுஞ் செழித்து
நலன்கள் பெருகிடு மென்றதுவே !

134