பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


பண்டிகை

பண்டி கையாம் பண்டிகை !
படாஅர் படர்அர்ப் பண்டிகை !
பெண்டு பிள்ளை யனைவருக்கும்
பிரிய மான பண்டிகை !

வேண்டு கோளு மாகவே
வேடிக் கையு மாகவே
வாண்டுப் பையல் வக்கணங்கள்
வாரிக் கொட்டும் பண்டிகை !

கடையில் நீண்ட காலமாய்க்
கசங்கி நைந்த துணியெலாம்
உடைகளாகி வீடுதோறும்
உவக்க வந்த பண்டிகை !

பையன், பாட்டன் அனைவரும்
பண்ணு மவச ரத்தினால்
தையற் காரர் கையும் காலும்
தவித விக்கும் பண்டிகை !

மாமனார்கள் பெட்டியில்
மறைந்திருந்த நோட்டுகள்
தாமிருந்த தலத்தை விட்டுத்
தப்பி யோடும் பண்டிகை !

என்று மில்லா வழக்கமாய்
எழுந்தெல் லாரும் இரவிலே
நன்று தேய்த்துக் குளித்துவிட்டு
நகைக்கப் பண்ணும் பண்டிகை !

புத்தம் புதிய வுடைகளால்
புசிக்கும் அப்பம் போளியால்
தித்திப் பான பண்டிகை !
தீபாவளியிப் பண்டிகை !