பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


சுதந்தர நாள்


என்றென்று மெங்கணும் நின்று நிலவுக
இன்பச் சுதந்தரநாள்! இன்று
மன்றில் மலர்ந்து மனையில் கமழ்ந்திடும்
மங்கல மாகிய நாள் !

துன்ப இருளைத் தொலைத்துக் கதிரெனத்
தோன்றித் துலங்கிடும்நாள் - என்றும்
இன்ப வொளியைப் பரப்பிச் சமத்துவம்
எய்த இலங்கிடும் நாள் !

உன்னத மானநம் ஒற்றுமைச் சக்தி
உலருக் குணர்த்திடும் நாள் - ஈன்ற
அன்னையெம் பாரத தேவியி னின்னல்
அனைத்து மகன்றிடும் நாள் !

நித்திய மானசு யாட்சி நிலைத்து
நினைவி லிருத்திடும் நாள்
புத்தம் புதிய வுணர்வுகள் பூத்துப்
பொலிந்து கமழ்ந்திடுநாள் !

உடைமை யனைத்தினு மொன்று முரிமை
உவந்திடப் பற்றியநாள் - நின்ற
அடிமை விலங்குடை பட்டுக் களிக்கும்
அமைதிக் கடிப்படை நாள் !

சீரிய தான நெறிதனி லேசினம்
செற்றம் சிறுமையின்றி - நன்று
பாரத வீரப் புதல்வர்கள் வெற்றிப்
பதாகை யுயர்த்திடு நாள் !

பண்ணிய லின்பத் தமிழிசை பாடிப்
பரவச மெய் திடுநாள் ! - இன்றெம்
அண்ணலெம் காந்தியின் எண்ணம்கை கூடிய
ஆனந்தச் சுதந்தர நாள் !

179