பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


திருவிளக்கு

திருவிளக் குத்திரு நாளென இன்றும்
தேசம் தெரிந்துகொண் டாடியே
இரவளிக் கும்இருள் நீக்கிட அன்றோர்
இளஞனிதயத்தி லெண்ணிவிட்டான்

கருதிய தொன்றைக் கருத்துடனாய்ந்ததன்
காரண காரியம் கண்டறிந்து,
அரிதின் முயன்றுமண் ணாலுரு வாக்கி
அகல்விளக் கொன்றதைச் சுட்டெடுத்தான்

நரக மெனத்துயர் நல்கிய வீடுகள்
நல்லொளி யுற்றுத் திகழ்ந்திடவே
உருகிய நெய்யதி லூற்றியே பஞ்சை
உருட்டி ஒருதிரி யிட்டுவைத்தான்

'அருவருக் கும் இருள் அகலுக இந்த
அவனியி லின்று முதல்' எனவே
திருவிளக் குத்திரி தன்னில் திளைத்தெரி
தீயைச்சினேகிதம் செய்துவிட்டான் !

சின்னஞ் சிறியது வாயினும் அவ்வெழில்
செல்வத் திருவிளக் கக்கணமே
கன்னங் கரிய இருளை விரட்டிக்
கவினொளி காலுதல் கண்டறிந்தான்

கண்ணகல் ஞால மனைத்தி னெழிலுமக்
கங்குல் பொழுதில் கடுகிவந்து
திண்ணை தெருக்களனைத்து மிலங்கத்
தெரிந்திடும் காட்சி தெரியவைத்தான்.

மங்குமிம் மாலை மயக்கிடையேஒரு
மங்கல மாகவே அன்று முதல்
தங்க ஒளியைப் பரப்பிடச்செய்யுது
தன்னிகரற்ற திருவிளக்கு !

183