பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


துணிவு


பிஞ்சு நாட்பட முற்றிக் கனிந்ததும்
பிணைப்பு நீங்கிப் பிரிந்திடுங் காட்சியை
நெஞ்சி லுன்றி நினைப்பவ னாகியே
நீணி லந்தனில் வாழத் துணிகிறேன் !

அற்ப மான செடியி னடியிலே
அடையு மாறுத லற்பமே யாதலால்
கற்ப கத்தரு நிழலைக் காணவே
கதிரவன்சினம் தாங்கத் துணிகிறேன் !

வீழ்ந்த போதினில் வீய்ந்திடு வா யென
வீணர் கூக்குரல் வீசித் தடுப்பினும்
ஆழ்ந்த கல்விக் கடலிடை முத்துகள்
அடைய வேண்டி யமிழத் துணிகிறேன்!

ஆல காலமி தென்னத் துயரிருள்,
அனைத்து மேகமு மொன்று திரண்டவந்
நீல வானென நெஞ்சில் படரினும்
நிலவு மிழ்மதி யாகத் துணிகிறேன் !

மூடர் தங்கள் முகமெனும் காட்டிலே
மூர்க்க முள்ள புலிகள் முடுகிடின்
ஏடு தன்னையோர் வில்லென ஏந்தியே
இனிய சொற்கணை யெய்யத் துணிகிறேன் !

அருளில் லாமல் பணத்தைப் பெருக்கினோர்
அகத்து தித்து வளர்ந்து நிறைந்தபேர்
இருளெ லாமொன்று கூடினு மஞ்சிடா
தெரியும் நெய்விளக் காகத் துணிகிறேன்!

தீட்டி வீசிடும் கத்திக் கெதிர்செலின்
தீங்கு நேருமென்றுள்ளம் தெளியினும்
நாட்டு நன்மையைக் கோரி யழைத்திடின்
நகைமுகத்துடன் தாங்கத் துணிகிறேன் !

73