பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

வள்ளியம்மாள் கல்வி அறம்


பெற்றுத் தருவதாக உறுதி அளித்தேன். அந்த விதத்திலே இங்கு உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமையடைகிறேன். உங்களைப் பார்க்கும் போது 'அந்த நாள் ஞாபகம் என் நெஞ்சிலே வருகின்றது' என்று சொல்ல வேண்டும். எனக்குக் கவிநிலவு என்பது சொந்தப் பெயர் அல்ல. மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே 3000 கவியரங்கங்கள் பாடிய முதல் பெண் கவிஞர் என்பதன் காரணமாக மறைந்த நம்முடைய தமிழக முதல்வர் எம்.ஜி ஆர். அவர்கள் வழங்கிய சிறப்புப் பெயரே கவிநிலவு ஆகும்.

பெண்களின் சிறப்பைப் பற்றிப் பேசவேண்டும் என்பதற்காகவே இங்கு நான் உங்களுடன் கலந்து கொள்கிறேன். எத்தனைத் துறைகள் வந்தாலும் அத்தனைத் துறைகளையும் ஏற்று, நினைத்ததைச் சாதிக்கக் கூடியவர்கள் பெண்கள். அந்தக் காலத்திலே,

“அடுப்பே நீயே சரணாகதியே!
நீ போட்டு மிதியே! எனக்கு
மண்டையில் கிடையாது மதியே!
இது தான் எங்களுக்குத் தலை விதியே!
எங்களுக்கெல்லாம் வரப்போகிறது அதோகதியே

என்று அடுப்பு ஒன்றையே எடுப்பாகக் கொண்டு, துடுப்பாக வைத்து நமக்கு இருக்கும் கடுப்பைக்கூட வெளியே சொல்ல முடியாத அளவிற்குப் பொறுப்பு என்பதனை விருப்பம் இல்லாமல் நம் தலைமீது சுமத்தி விட்டார்கள்.

பாரதியார் பாடியிருக்கின்றார்,

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் உள்ளதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்