பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமதி சகுந்தலா சுப்பிரமணியம் அவர்கள் தலைமை எற்றார்கள். மாண்பமை திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் அனுப்பிய வாழ்த்துரை.



பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம் அவர்களைப் பல ஆண்டுகளாக அறிவேன். அவர் வெறும் பேராசிரியர் மட்டுமல்லர், நல்ல பண்பாளர், அத்துடன் சிறந்த செயல்வீரர். அவருடைய அன்னையார் வள்ளியம்மை அவர்கள் பெயரால் ஒரு கல்வி அறக்கட்டளையை நிறுவி ஒரு பெரிய கல்வி நிறுவனத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குக் கல்வி புகட்டும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சிறிய அளவில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் இன்று வளர்ந்து பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவியரைக் கொண்டு விளங்குகிறது. இன்று, வள்ளியம்மாள் கல்வி அறம் வெள்ளி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறது.

சிறந்த இந்தப் பள்ளியின் சிறப்புக்கு முக்கிய காரணம் அ.மு.ப.வின் செயல்திறன் தான் என்று சொல்ல வேண்டும். நல்ல ஆசிரியப் பெருமக்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு அறிவும் பண்பும் செயலாற்றலும் பெறக் கூடிய முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது போற்றுதற்குரியதாகும்.

வள்ளியம்மாள் கல்வி அறம் மேன்மேலும் வளர்ந்து தமிழ் நாட்டு மக்களுக்கு நல்ல பணியாற்றிவரும் என நம்புகிறேன். இந்நற்பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லாருக்கும் எனது பாராட்டுக்களும் நல்வாழ்த்தும் உரித்தாகுக.

சி. சுப்பிரமணியம்