பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் அவர்கள் வெள்ளிவிழா மலரை வெளியிட்டு ஆற்றிய உரை.(11-3-'93)



இன்றைய விழாவின் தலைவர், மதிப்பிற்குரிய உயர்திரு. சாதிக் அவர்களே! என்னை வளர்த்து ஆளாக்கிய பேராசிரியர் அ மு.ப. அவர்களே! என் அருமைத்தம்பி டாக்டர். அரசு அவர்களே! பெரியோர்களே! மாணவ, மாணவியர்களே! அனைவருக்கும் வணக்கம்.

எதிர்பாராமல் கிடைக்கின்ற பதவிதான் எப்பொழுதும் மகிழ்ச்சியைத் தரும். அவ்வகையில் இன்று எனக்குக் கொடுத்த இவ்வாய்ப்பு பெருமகிழ்ச்சியினைத் தருகிறது. பேராசிரியப் பெருந்தகை கட்டிக் காத்து வருகின்ற இந்நிறுவனத்தின் வெள்ளிவிழா தொடக்க நாள் விழா அன்றே கலந்து கொள்ள நினைந்தேன். சில முக்கியமான பணிகளில் ஈடுபட்டிருந்ததால் இன்று கலந்து கொள்ள நேரிட்டது. என்னை வளர்த்து ஆளாக்கியவர்கள் இருவர். ஒருவர் அமரர் மு.வ. மற்றொருவர் அ.மு.ப. அவர்கள். இன்று நான் பல்கலைக்கழகத் துணைவேந்தராய் உயர்வதற்கு உறுதுணையாக இருந்தவர் இவர். நான் ஏற்காட்டில் இருந்து எம்.லிட், பட்டம் பெறுவதற்கும், ஆராய்ச்சிப்பட்டம் பெறுவதற்கும் பெரிதும் உறுதுணையாக இருந்தவர் அ மு.ப.

அந்தக் காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தபோது தான் பெற்ற உதவித் தொகையான 15 ரூபாயில் 1-25 ரூபாயை மிச்சப்படுத்திச் செம்மையான வாழ்க்கையை நடத்தி இன்று இந்த உயர்ந்த நிலைக்கு வளர்ந்து நமக்கெல்லாம் ஓர் இமாலய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளார். ‘உண்மையான உழைப்பால் உயரமுடியும்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப செங்கல், செங்கல்லாகக் கொண்டு மெல்ல, மெல்ல உயர்ந்து இன்று ஒரு மாபெரும் கட்டடத்தை உருவாக்கியுள்ளார்,