பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

எளிமை இனிமை தொண்டுள்ளம் கொண்ட சான்றோர் குவலயத்தில் கொண்டிருக்கும் கொள்கை உயர்ந்தது.

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’

என்ற திருமூலர் கொள்கையே சான்றோர் கொள்கை. செய்யும் தொழிலைத் தெய்வமாகவும் தமிழாகவும் பார்க்கும் சான்றோர் எங்கள் பேராசிரியரும் ஞானத்தந்தையுமாகிய வள்ளியம்மாள் கல்வி அறத்தின் நிறுவனர் அ.மு.ப. அவர்கள் தொட்டது துலங்கும். ‘எடுத்த காரியம் யாவினும் வெற்றி’யே சேரும்.

எண்ணித் துணிவார். துணிந்தபின் திட்டமிடுவார். திட்டமிட்டபின் செயல்படுத்துவார். செயற்பாடு சிறப்புற நிறைவுறும் வரை கண் துஞ்சார்; செவ்வி அருமையும் பாரார். செயல் எப்போதும் கல்வி சார்ந்ததாகவே அமையும். நிறுவனர் அவர்கள் தோற்றுவித்த கல்வி அறம் அவர் தம் முத்துவிழா தாளில் வெள்ளிவிழாக் கண்டு கல்லூரி மேற் படிப்புவரை மேன்மேலும் பொலிவு பெற்றுக் கொண்டிருக் கின்றது.

வெள்ளிவிழாவில் பங்கேற்ற பெருமக்கள் வள்ளியம்மாளின் கல்வி அறத்தையும் நிறுவனரையும் பிரித்துப்பாராமல் இணைத்தே சிறப்பித்துள்ளமையை நாலில் காணலாம். தாயிடமிருந்து இன்றும் தம்மைப் பிரித்துப்பாராமல் ஒன்றியிருக்கும் நிறுவனர் வள்ளியம்மாள் கல்வி அறத்தையும் தாயாகக் கண்டு ஒன்றியிருப்பதில் வியப்பேதுமில்லை .

பேராசிரியர், நிறுவனர் தம் முத்துவிழா நாளில் 'வெள்ளி விழாச் சொற்பொழிவுகள்' நூலினைத் தொகுத்துப் பதிப்பதில் மிகவும் பெருமைப் படுகிறேன். என்னையும் இப்பணியில் ஈடுபடுத்தி மகிழவைத்த இறையருளை, நிறுவனர் தம் அருளை என்றும் வேண்டுகிறேன்.


திருத்தணிகை
5—7—1993

பணிவுடன்,
சா. வளவன்