பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளி விழா

75



கல்வித்துறையில் அனுபவம் மிக்க திரு. பரமசிவானந்தம் அவர்கள், உங்களைப் போன்ற மாணவர்களின் நோக்கைப் புரிந்து கொண்டு கல்விக்கொள்கையைச் செயல்படுத்தி வருகின்றார்கள். அருமைக்குரிய மாணவச் சகோதரிகளே! இக்கொள்கையை முன்வைத்து விஞ்ஞானச் சிந்தனை உங்களுக்கு வரவேண்டும். பழமையான சிந்தனைகளை மறந்துவிடாமல் அதே நேரத்தில் புதுமையைான சிந்தனைகளுக்கு இடம் தர வேண்டும்.

எல்லாரும் மனிதர்கள், எல்லாரும் மனித இனம் என்ற உணர்வு உங்களுக்கு வரவேண்டும். ஜாதி, இனம் வேறுபாடு, என்ற குறுகிய எண்ணங்களுக்கு நீங்கள் இடம்தரக் கூடாது என்பது தான் என்னுடைய இந்த நேர வேண்டுகோள். அதுதான் புதிய கல்விக் கொள்கையினுடைய அடிப்படைஎன்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்கின்ற முயற்சிகள் பல்வேறு முறைகளிலே இன்று நடைபெற்று வருகின்றன. நாற்பது ஆண்டுக்கால சுதந்திர இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு மூன்று அரசியல் பலிகளை நாம் கொடுத்திருக்கின்றோம். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் காந்தியடிகள் மதவெறியரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இருபத்தோராம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கின்ற நேரத்திலே திருமதி. இந்திரா காந்தி அவர்களை இனவெறியர்கள் சுட்டுக் கொன்றார்கள். இருப்பத்தோராவது நூற்றாண்டிற்கு இளைஞர்களை அழைத்துச் செல்கின்றேன் என்று அறைகூவல் விடுத்த இளைஞரை இனவெறியர்கள் தமிழ் மண்ணிலே சாய்த்து விட்டார்கள். இவ்வளவு பெரிய உயிர்த் தியாகங்களைக் கொடுத்து இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைக் காத்து வருகின்றோம்.