பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14-3-93ல் அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் வாழ்த்துச் சொற்பொழிவாக, 'கந்தன் கருணை' என்ற பொருளில் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் ஆற்றிய உரை.



இப்பட்டமளிப்பு விழாவில் ஞானமே வடிவாகிய வயலூர் வள்ளல் பெருமானுடைய தனிப்பெருங் கருணையினாலே நான் கலந்து கொண்டிருக்கிறேன். அன்பு நிறைந்த தாய்க் குலத்திற்கும், அருள் நிறைந்த பெரியோர்களுக்கும் பணிவான வணக்கம்.

கல்விக்கும், செல்வத்திற்குமுள்ள வேற்றுமையை இப்பொழுது எடுத்துச் சொல்லப் போகிறேன். செல்வம் மனிதனுக்கு இன்றியமையாதது. ஆனால் அதைக் காட்டிலும் உயர்ந்தது கல்வி. ஒருவன் பல நிறுவனங்களை அமைத்துப் பொருள் ஈட்டுகின்றான். சில ஆண்டுகளுக்குள் மாருதி கார், பெரிய பங்களா என்று பல லட்சம் பெறுமானமுள்ள பொருள்களுக்கு அதிபதியாகின்றான். ஆனால் ஒருவன் தனவந்தன் ஆகவேண்டுமென்றால் பலர் ஏழையாக இருக்க வேண்டும். ஒருபக்கம் மேடானால் பல பக்கம் பள்ளமாகும். ஒருவன் படித்து அறிவாளியாக வேண்டுமென்றால் பலர் மூடர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. செல்வம் ஒருவரிடத்திலிருந்து மற்றொருவரிடத்திற்குச் செல்லும். அறிவு என்பது மனிதனின் உள்ளத்தில் இருந்து வளர்ச்சி அடைவது. செடி வளர்வது போல அறிவும் வளர்கிறது, செடிக்கு நீர் வார்ப்பது போல அறிவுக்குக் கல்வி வேண்டும். இதையே,

“நீரளவே ஆகுமாம் நீராம்பல்; தான்கற்ற
நூலறிவே ஆகுமாம் நுண்ணறிவு—மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்

என்று ஔவையார் பாடியுள்ளார். எத்தனைக்கு எத்தனை படிக்கிறோமா, அத்தனைக்கு அத்தனை அறிவிலே நுட்பம்