பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளி விழா

91



நான் முதன் முறையாக இக்கல்லூரிக்கு வந்தபோது புதிய இரண்டு துறைகளை வழங்கவேண்டும் என்று நிறுவனர் கேட்டார்கள். நாங்கள் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரிடமும், புரட்சித்தலைவியிடமும், பல ஆட்சித் தலைவர்களிடமும் வேண்டி, 'பெண்களுக்குப் பெருமை தரக் கூடிய வகையில் அமைக்கப்பட்ட இக்கல்லூரிக்குப் பல துறைகளைக் கொடுத்தாலும் தகும் என்று வாதாடி' நிறுவனர் கேட்ட வகையிலே இரண்டு புதிய துறைகளைப் பெற்றுக் கொடுத்தோம்.

என்னை நிறுவனர் அவர்கள் மிக அதிகமாகப் புகழ்ந்தார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் இராமருக்கு அணில் செய்த சிறிய உதவியைப் போன்றது தான் இது. இங்கு வந்து பார்த்தபோது இது தலையா! கடலலையா என்பது போல நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள்.

அக்காலத்தில் பெண்களை எல்லாம் தெய்வங்களாக்கி வீட்டுக்குள் பூட்டி வைத்தார்கள். பெண்களையெல்லாம் உயர்த்துவது போல உயர்த்தி, மட்டம் தட்டி வந்தார்கள். நமக்கெல்லாம் அடுப்பையே இருப்பாக, நம் கடுப்பைக் கூடச் சொல்ல இடம் கொடுக்காது, உண்ண உணவும், உடுக்க உடையும் இருந்தால் போதும் என்று சொல்லி நாம் வருந்திக் கொண்டிருந்த நேரத்திலே தான், பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்று சொல்லிப் பல பெரியவர்கள் நம்முடைய பிரதிநிதிகளாகத் தோன்றினர்.

அன்று சொன்னான் பாரதி.

“நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நேர்மையும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் உடைய
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்”,