பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா ஆறாவது நாள் 15-3-93 (திங்கள்) தொடக்கக்கல்வி இயக்குநர் உயர்திரு. எஸ். பரமசிவம் அவர்கள் ஆற்றிய வாழ்த்துரை.



பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய விழாத் தலைவராக வீற்றிருக்கின்ற மாண்புமிகு நீதிபதி பு ரா. கோகுலகிருஷ்ணன் அவர்களே! வள்ளியம்மாள் கல்வி அறத்தின் நிறுவனர் அ மு.ப. அவர்களே! சட்டமன்ற உறுப்பினர் அவர்களே! அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றிய திருமதி வசந்திதேவி அவர்களே! ஆசிரியப் பெருமக்களே! பெற்றோர்களே! மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இங்கே நீண்டதொரு சொற்பொழிவாற்றி அமர்ந்திருக்கிறார்கள். எனவே நான் இரண்டொரு கருத்துக்களை மட்டுமே கூறப் போகின்றேன். இந்தப் பள்ளியின் நிறுவனர் திரு. அ.மு.ப. அவர்கள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற பின்பு, தொடர்ந்து கல்வித் தொண்டைப் புரிவதற்காகவே இந்தக்கல்வி அறத்தை நிறுவினார்.

நான் ஒரு ஐந்தாண்டுக் காலமாக மத்திய கல்விக் குழுவின் மாநில அதிகாரியாகப் பணியாற்றிய போது, இது போன்ற கல்விக் கூடங்களைச் சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. நான் சந்தித்த கல்வியாளர்களில் அ. மு. ப. அவர்கள் மிகச் சிறந்தவர் என்பதை இங்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

தொடக்கத்தில் இந்நிறுவனம் C. B. S. E. பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, பின்பு Matriculation பள்ளியாக மாற்றப்பட்டது. பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப, சிறந்த கல்வித்தரத்தோடு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ, மாணவியரும் தேர்வில் நூற்றுக்கு நூறு விழுக்காடுகள் தேர்ச்சி பெறுகின்றனர்.