பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
112
 

தன்னேமி நடப்ப, விளங்கு ஜயமகளை
இளங்கோப் பருவத்து சக்கரக் கோட்டத்து
வீரத் தொழிலால்வது மணந்தான்

என்பது ஒன்று. இதனால் இவன் இக்கோயிலுக்குச் செய்த பணி விளங்கவில்லை என்றாலும் மன்னனது கீர்த்தி மட்டும் பெரிதாகவே இருந்திருக்கிறது என்று அறிகிறோம். வீர ராஜேந்திர பாண்டியன் காலத்திய கல்வெட்டு ஒன்றில் திரு அம்பலமுடையானான தொண்டைமானால் திருப்புள்ளிருக்கு வேளூர் நாயகனுக்கு இறையிலியாக விடப் பெற்ற நிலங்களைக் குறிக்கின்றது. இன்னும் அச்சுதப்ப நாயக்கர், துளஜா மகாராஜா முதலியவர்கள் விட்ட நிபந்தங்களைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் உண்டு.

இக்கோயில் தருமபுர ஆதீனக் கோயில்களில் பெரியது. பொருள் வளம் உடையது; சிறப்பு மிக்கது. 6105 ஏக்கர் நன்செய் நிலமும் 1176 ஏக்கர் புன் செய்யும், லக்ஷத்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள திரு ஆபரணமும் இக்கோயிலுக்கு உண்டு என்றால் வேறு அதிகம் சொல்வானேன். இன்றைய ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாச்சர்ய சுவாமிகள், இந்த வைத்தியநாதன் தம்பதிகளிடத்தும் அவர்களைவிட அந்தச் செல்வமுத்துக்குமரனிடமும் அளவிலா பக்தி உடையவர்கள் ஆதலால் கோயில் காரியங்களை யெல்லாம் தம் நேரடிப் பார்வையிலேயே நடத்துகிறார்கள். திருப்பணி செய்து கொண்டே யிருக்கிறார்கள். தங்கக் கவசத்துக்கு மேல் தங்கக் கவசமாக மூர்த்திகளுக்கு அணிந்து அணிந்து பார்த்து மகிழ்கிறார்கள். சென்னையிலேயே 'வேளூர் இறை பணி மன்றம்' ஒன்றை நிறுவி, சைவ சமயப் பற்றை வளர்க்கிறார்கள். இதனால்தானே வைத்தியநாதனையும் செல்வமுத்துக் குமரனையும் ஆர, அமர இருந்து பார்த்து வழிபட்டுத் திரும்ப முடிகிறது நமக்கு.