பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

147

சீர் ஏறும் இசைபாடித்
திருத்தொண்டர் திருவாயில்
நேரே கும்பிடவேண்டும்
எனநினைந்தார்க்கு, அதுநேர்வார்
கார் ஏறும் எயில் புன்கூர்
கண்ணுதலார்திருமுன்பு
பேர் ஏற்றை விலங்க அருள்
புரிந்து அருளிப்புலப்படுத்தார்

என்று பாடுகிறார் அவரது திருத்தொண்டர் புராணத்தில். நந்தி விலகி தரிசனத்துக்கு வழிசெய்த காரணத்தால், தில்லைச் சிற்றம்பலவனுமே அருள் புரிவான் என்ற நம்பிக்கை வலுக்கிறது நந்தன் சகாக்களிடத்தே. நாளையே போக வேணும் என்று துடிக்கிறான் நந்தன். ஆனால் ஆண்டானான அந்தணர் எளிதாக இடங் கொடுத்து விடுவாரோ? நாற்பது வேலி நிலத்துக்கு நடவு நட்டு விட்டுத்தான் போகவேனும் என்கிறார். எப்படி இதனை முடிப்பது என்று நந்தன் மயங்கி நின்றபோது இறைவனே இந்த வேலையையும் முடித்துக் கொடுக்கிறார். அந்தணரோ நந்தன் பக்தியின் பெருமையை உணர்ந்து அவன்காலிலேயே விழுந்து வணங்கி எழுந்து விடை கொடுக்கிறார். பின்னர் ஆறாத பெருங்காதல் ஒப்பரிதாய் வளர்ந்தோங்க, உள்ளுருகிக் கைதொழுத கோலத்தோடு தில்லை சென்று இறைவன் அருளியபடி எரி மூழ்கி, உலகுய்ய நடம் ஆடும் நடராஜனை வழிபட்டு முத்தி பெற்றார் என்பது வரலாறு. இந்த நந்தி விலகிக் கிடக்கும் நேர்த்தி யொன்றைக் காண்பதற்கே இக்கோயிலுக்குப் போகலாம். வெளியில் நின்று பார்த்தாலும் சிவலோகன் தரிசனம் கிட்டும்.

சிவலோகநாதன் சந்நிதிக்கே போய்விட்டாலும் அங்கிருந்து பார்த்தால் நந்தி எவ்வளவு தூரம் வடபக்கம் விலகி வழி மறையாதிருக்கிறது என்றும் தெரியும்.