பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

வேங்கடம் முதல் குமரி வரை

கொடுத்து விடுகிறார்கள் நம் கலைஞர்கள். அவனே பிக்ஷாடனன். இந்தப் பிக்ஷாடனன் அநேகமாய்ப் பழம் பெருமையுடைய சிவன் கோயில்களில் எல்லாம் இருப்பவன். ஆனால் அவனது சிறந்த திரு உருவைக் காண வேண்டுமென்றால் நாம் போக வேண்டுவது அந்த அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான வழுவூருக்கே. வழி வழுவாது அங்கேயே செல்கிறோம் நாம் இன்று.

மாயூரம் திருவாரூர் ரோட்டில், மாயூரத்திலிருந்து ஆறு மைல் தெற்கே வந்து அதன்பின் ஒரு மைல் மேற்கு நோக்கிக் சென்றால், இந்த வழுவூர் சென்று சேரலாம். ரயிலிலேயே போனால் இலந்தங்குடி ஸ்டேஷனில் இறங்கி ஆறு பர்லாங்கு நடந்து செல்ல வேண்டும். பிரளய காலத்தில் உலகமெல்லாம் அழிந்தபோதும் இவ்வூர் அழியாது வழுவின காரணத்தால் வழுவூர் என்ற பெயர் நிலைத்ததாகத் தலபுராணம் கூறுகிறது. பல தலங்களின் நடுவில் கைலாயம் போல் இருப்பதால் பர கைலாசம் என்றும், தன்னை அடைந்தவர்களுக்கு எல்லாம் சிவஞானத்தை அருள்வதால் ஞானபூமி என்றும் பெயர்கள் வழங்குகின்றன.

வட மொழியிலே சுயுதபுரி என்றும் பிப்பலாரண்யம் என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள கோயில் நல்ல பெரிய கோயில். கோயில் வாயிலை நூற்று ஐம்பதடிவரை உயர்ந்த கோபுரம் அழகு செய்கிறது. கோபுரத்தைக் கடந்து சென்றால், ஈசான தீர்த்தம் என்னும் திருக்குளம் இருக்கிறது. இதனை வலம் வந்தே கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலின் தென் வடல் 342 அடியும் கிழமேல் 380 அடியும் உள்ள மதிலால் சூழப்பட்டிருக்கிறது. கோயிலின் மூன்றாவது வாயிலையும் கடந்துதான் மகா மண்டபம் வந்து சேர வேண்டும். அங்கு வந்து வடக்கே திரும்பினால் இரும்புக் கிராதியிட்ட ஒரு மேடைமீது முன்னர் குறித்த பிக்ஷாடனர் நின்று கொண்டிருப்பார். சோழர் காலத்துச் செப்புப் படிமங்களில் சிறந்த ஒன்று அது. மூன்றடிக்குமேல் உயர்ந்த