பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
21
 

இவருடைய பரம்பரையிலே பதினெட்டாவது பட்டத்தில் இருப்பவர்கள்தான் இன்றைய சிவஞான பாலய சுவாமிகள்.

இத்தனையும் தெரிந்தபின் கோயிலுள் நுழையலாம். முதலில் விநாயகரை வணங்கிவிட்டு மேலே நடக்கலாம். கோயிலின் தெற்குக் கட்டில் விசுவநாதரும் விசாலாக்ஷியும் இருக்கிறார்கள். பால சித்தரைத் தன்னோடு ஐக்கியப் படுத்திக்கொண்ட சிவலிங்கத் திருஉருவே விசுவநாதர். இந்த விசுவநாதரை வணங்கி விட்டு, அடுத்த வடக்கு வாயிலின் வழியாகச் சென்று மேற்கு வாயிலில் திரும்பினால், முருகனைக் கண்குளிரக் காணலாம், வள்ளி தெய்வானையுடன், கிழக்கு நோக்கியவராய்க் கல்யாண கோலத்திலேயே நிற்கிறார் மூலமூர்த்தி. மலையின் வடதலை உயர்ந்திருப்பதுபோல, இங்குள்ள மயிலும் வடக்கு நோக்கிய முகத்தோடேயே நிற்கிறது. முருகன் நல்ல அழகன், இளைஞன். இந்த மூர்த்தியைத் தரிசித்தபோது எனக்கு ஓர் ஐயம். இந்த அழகான குமரனையா 'குறிஞ்சிக் கிழவன் என்று ஓதுகிறது குவலயம்?' என்று. எப்படியும் இருக்கட்டும்; அந்தக் கிழவனாம் குமரனைத் தரிசித்து விட்டு, சென்ற வாயில் வழியே வெளியே வந்து பிராகாரத்தைச் சுற்றி, ஒன்றுக்கு மூன்றாக இருக்கும் உற்சவ மூர்த்திகளையும் வணங்கிவிட்டு வெளியே வரலாம். வெளியில் வந்ததும், தென்பக்கத்தில் உள்ள திருமடத்தில் இருக்கும் சிவஞான பாலய சுவாமிகளையும் கண்டு நம் வணக்கத்தைத் தெரிவிக்கலாம்.

இந்தத் தலத்தின் பெயருக்கு ஏற்ப இங்கு ஒரு நல்ல அழகான தங்க மயில்வாகனம் ஒன்றும் செய்து வைத்திருக்கிறார்கள். நிரம்பப் பெரிய வாகனம். இந்தத் தங்க மயிலின்மேல் ஆரோகணித்து முருகன் மலைமேலிருந்து இறங்கிவரும்போது கீழே இருந்து நோக்கினால், ஒரு பெரிய மயில் உண்மையிலேயே பறந்து வருவது போலவே