பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சாபமிட்டுக் கொள்ள, பின்னர் இருவரும் இத்தலம் வந்து சாபவிமோசனம் பெற்றனர் என்றும் வரலாறு. 'கம்பன் பிறந்த ஊர், காவேரி தங்கும் ஊர், கும்பமுனி சாபம் குலைத்த ஊர்' என்றுதானே இத்தலத்தின் புகழ் பரவியிருக்கிறது. மார்க்கண்டேயர் என்றும் பதினாறு வயது என்று அமிர்தகடேசுவரரிடம் வரம் பெற்றாரே ஒழிய, அழியாத சாயுஜ்யத்தைப் பெற ஆமருவியப்பனையே அடைந்திருக்கிறார். பிரஹலாதனின் பக்தியை மெச்சிய பெருமாள், அவனையும் தன் பக்கத்திலேயே இருத்திக் கொண்டிருக்கிறான். அதனால்தானோ என்னவோ முதல் நூலில் இல்லாத பிரஹலாத வரலாற்றைக் காவியத்திலே புகுந்தி வைத்திருக்கிறான் கம்பன். ஆமருவியப்பனைப் பார்த்த பின் அவன் துணைவியாம் செங்கமலவல்லித்தாயார் சந்நிதியும் சென்று வணங்கலாம். ராமனுக்கும் ஆழ்வாருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலில் அவர்களையும் வணங்கிவிட்டு வெளியே வரலாம். இத்தனையும் பார்த்தபின் ஒன்று ஞாபகத்துக்கு வரும் இங்குதானே கம்பன் மேடு என்று ஒரு இடம் இருக்கிறது என்பது. அதைக் காண ஊரின் தென்மேற்குக் கோடிக்கே செல்லவேண்டும். அங்கு புதைபொருள் இலாக்காவினர் ஒரு போர்டு வைத்திருக்கிறார்கள்: கம்பன் குடியிருந்த இடம் அது என்பர். அங்கு சில ஓட்டாஞ்சல்லிகள்தான் கிடைக்கும். முன்னர் சில காசுகளும் கிடைத்தன என்பார்கள். நமக்கு எதற்கு 'ஓடும் செம்பொனும்' அவற்றை யெல்லாம் விட அழகான காவியமாம் இராமவதாரமே கிடைத்திருக்கிறதே. ஆதலால் கம்பன் பிறந்த ஊரில் பிறந்த பெருமானுக்கு வணக்கம் செலுத்துவதோடே, கம்பன் பிறந்து வளர்ந்த இடத்துக்கே நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பலாம்.