பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

247

என்னவோ? இவர்தான் ஏகபத்தினிவிரதர் ஆயிற்றே, மைத்துனன் விஷ்ணுவைப் பின்பாற்றாதவராயிற்றே. அப்படி இருந்தும் ஏன் இந்தக் கஷ்டம்? எனக்குத் தோன்றுகிறது. உத்தால மரத்தடியில் தோன்றி நறுஞ்சாந்து இளமுலையை மணந்தவர் மறைந்தாரே ஒழிய, ஓடிவிட வில்லை. பக்கத்தில் உள்ள வேள்விக் குடியிலேயே பரிமள சுகந்த நாயகியுடன் கல்யாணக்கோலத்திலேயே நின்று கொண்டிருக்கிறார். அதனால்தானே, இத்தலத்துக்கு வந்த சம்பந்தர், இந்தத் துருத்தியாரையும் அந்த வேள்விக்குடியாரையும் சேர்த்தே பாடியிருக்கிறார் ஒரு பதிகத்தில்,

கரும்பன வரிசிலைப் பெருந்தகை
காமனைக் கவின் அழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்
கொன்றை அம் சுடர்ச்சடையார்,
அரும்பனவனமுலை அரிவையோடு
ஒரு பகல் அமர்ந்த பிரான்
விரும்பிடம் துருத்தியார், இரவு இடத்து
உறைவர் வேள்விக்குடியே.

வந்ததே வந்தோம், இந்த வேள்விக்குடி, அதை அடுத்து இருக்கும் திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி எல்லாம் சென்று அங்குள்ள மூர்த்திகளையும் வணங்கியபின் திரும்பலாமே, என்ன? கொஞ்சம் நடக்கலாம் தானே. இங்கெல்லாம் செல்வதற்கு கார் உதவாது, ஜீப் இருந்தால் நல்லது. இல்லை வண்டிகளில்தான் செல்லவேண்டும். காலில் வலுவுள்ளவர்கள் நடந்தே செல்லலாம். குத்தாலத்துக் கோயிலைவிட்டுப் புறப்பட்டு, அக்கோயிலுக்கு வடபால் உள்ள காவிரியையும் கடந்து வட கீழ் திசை நோக்கி மூன்று மைல் சென்றால் வேள்விக்குடி வந்து சேரலாம். கோயில் சிறிய கோயில்தான். கல்யாணக் கோலத்தில் இறைவன் இங்கு எழுந்தருளியதற்குக் காதல் கீதம் ஒன்றும்