பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

வேங்கடம் முதல் குமரி வரை

இருப்பார். தமிழ் நாட்டிலுள்ள லிங்கோத்பவர் திரு உருவங்களிலெல்லாம் சிறந்த உரு அது. பொங்கழல் உருவனாகக் காட்சி கொடுப்பார். அவர் அழல் உருவன் என்பதைக் காட்ட அங்கு சுடர்விடும் நீண்ட வட்ட வடிவையே சிற்பி உருவாக்கியிருக்கிறான்.

லிங்கோத்பவரை வணங்கி வலம் வரும்போதே கோயிலின் அடித்தளத்திலுள்ள யாளி வரிசை, யானைவரிசை முதலியவைகளையும் காணலாம். அவைகளைப் பார்க்கும் போது பேலூர், ஹலபேடு முதலிய இடங்களில் உள்ள ஹொய்சலர் சிற்பங்கள் ஞாபகத்துக்கு வரும். சொல்லடுக்குகளின் மூலம் இன்னிசை எழுப்புவது போல் கல்லிலே உருவ அடுக்குகளை அமைப்பதன் மூலம் ஒரு மன எழுச்சியையே உண்டாக்கலாம் என்று தெரிந்திருக்கிறான் சிற்பி. இதனைப் பார்த்துக்கொண்டே உட்கோயிலில் நுழையலாம். கருவறையில் இருப்பவர் கம்பகரேசுரர். நல்ல அழகு தமிழில் நடுக்கம் தீர்த்த நாயகர் என்பது அவர் திருநாமம்.

தல வரலாற்றைத் திருப்பினால் பிரகலாதன், திருமால், வரகுணன் முதலிய எத்தனையோ பேருக்கு இவர் நடுக்கம் தீர்த்திருக்கிறார். ஆம்! நாமும்தான் வறுமையால், வயோதிகத்தால், நோய் நொடியால் எப்போதுமே நடுங்கியபடியே தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நடுக்கம் எல்லாம் தீர்ந்து 'அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே! உச்சி மீது வான் இடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென் பதில்லையே' என்று பாரதியுடன் சேர்ந்து பாடும் தெம்பு பெற இந்த நடுக்கம் தீர்க்கும் பெருமானை வணங்கத்தானே வேண்டும். ஆதலால் அவரை வணங்கிவிட்டு வெளியில் வரலாம்.

இந்தக் கோயிலில் உள்ள செப்புச் சிலைகளில் சிறப்பாய் இருப்பது பிக்ஷாடனத் திருக்கோலம், தனியாக