பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46
வேங்கடம் முதல் குமரி வரை
 

பராக்கிரமம் கூறும். அந்த மூர்த்தங்களில் சில சாந்த நிலை, சில ஆடும் தாண்டவ நிலை, சில அனுக்கிரகிக்கும் நிலை, சில சம்ஹார நிலை, சம்ஹார மூர்த்தங்கள் எட்டு. அந்த மூர்த்தங்களில் சிவனை வழிபடும் தலங்களையே அட்ட வீரட்டம் என்று சொல்கிறோம். அந்தகாசுரனைச் சம்ஹரித்த தலமே திருக்கோவலூர். இங்குள்ள மூர்த்தியை அந்தகாசுர சம்ஹாரமூர்த்தி என்று அழைக்கிறார்கள். மூலவர் லிங்கத் திருவுருவில்தான் இருக்கிறார் மேற்கு நோக்கிய சந்நிதியில், அந்தக் கோயிலுக்குள்ளேயே செப்புச் சிலை வடிவில் அந்தகாசுர சம்ஹாரரும் உருவாகியிருக்கிறார். அந்தகாசுரனைக் காலின் கீழ் போட்டு மிதித்துக்கொண்டு அவன் பேரில் சூலத்தைப் பாய்ச்சுகின்ற நிலையில் வடித்திருக்கிறான் சிற்பி, நல்ல சோழர் காலத்துச் செப்புப் படிமம். ஓங்கியும், தாழ்ந்தும் சூலம் ஏந்தும் கைகள். அதை ஓர் உயிர் ஓவியமாக ஆக்கிவிடுகிறது. இந்தக் கோயில் சமீப காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு நல்ல அழகாக வைக்கப்பட்டிருக்கிறது. அம்மையின் பெயர் சிவானந்த வல்லி. அவளது கோயில், வீரட்டேசுரர் கோயிலுக்கு இடப்புறம் தனித்ததொரு கோயில் மேற்கு நோக்கி இருக்கிறது. அம்மையின் வடிவம் அழகானது. இத் தலத்துக்கு ஞான சம்பந்தரும் அப்பரும் வந்திருக்கிறார்கள். இருவருமே இந்த வீரட்டானரைப் பாடியிருக்கிறார்கள்.

தலைசுமந்து இருகை நாற்றி
தரணிக்கே பொறையது ஆகி
நிலையிலா நெஞ்சம் தன்னுள்
நித்தலும் ஐவர் வேண்டும்
விலைகொடுத்து அறுக்க மாட்டேன்,
வேண்டிற்றேவேண்டி எய்த்தேன்
குலைகொள் மாங்கனிகள் சிந்தும்
கோவல் வீரட்டன் நீரே,

என்பது அப்பர் பாடிய தேவாரம்.