பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
71
 

அவ்வனத்தில் தவம் செய்யும் தூமப்ப முனிவர் சிரத்தில் படுகின்றன. தூமப்பர் மங்கணரை முயல் ஆகுக எனச் சபிக்கிறார். மனைவியிட்ட சாபத்தையே நிவர்த்தி செய்த இறைவன் முனிவர் இட்ட சாபத்தை மாற்றத் தயங்குவாரா? கார்த்திகைச் சோமவாரத் தீப தரிசனத்தின் மகிமையால் மங்கணர் பழைய உரு எய்துகிறார். இப்படி முயலுக்கு அருள் செய்த இறைவனது கருணையை, இந்தத் தலத்துக்கு வந்த சம்பந்தர் உணர்கிறார், பாடுகிறார்.

முன்ன நின்ற முடக்கால்
முயலுக்கு அருள் செய்து நீள்
புன்னை நின்று கமழ்
பாதிரிபுலியூர் உளான்
தன்னை நின்று வணங்கும்
தனைத் தவம் இல்லிகள்
பின்னை நின்ற பிணி
யாக்கை பெறுவார்களே

என்பதுதான் சம்பந்தர் தேவாரம்.

இப்படி முயல்களுக்குக்கூட அருள் செய்த பரமன் அருள் கனிந்த அடியவரான அப்பர் தளர்கின்றபோது சும்மா இருப்பாரா? சைவ மரபிலே பிறந்த மருள்நீக்கியார், சமண மதத்தைச் சார்ந்து தருமசேனர் ஆகிறார். இவரது தமக்கையார் திலகவதியார் விரும்பியபடி இவருக்குச் சூலை நோய் தந்து, ஆட்கொள்கிறார் இறைவன் திரு அதிகையிலே. இப்படி நாவுக்கரசர் சமணராயிருந்து சைவராக மாறி விட்டது, சமணர்களுக்குப் பிடிக்கவில்லை . சமணனாக இருந்த மன்னன் மகேந்திர வர்மனிடம் சொல்லி எத்தனையோ இன்னல்களை உண்டாக்குகிறார்கள். எத்தனை கொடுமைகளெல்லாம் உண்டோ, அத்தனையும் செய்து பார்த்துவிடுகிறான் அம்மன்னன். அதில் ஒன்று நாவுக்கரசரைக் கல்லிலே கட்டிக் கடலிலே தள்ளுதல்.