பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

வேங்கடம் முதல் குமரி வரை

கட்டப்பட்டது. தெற்குக் கோபுர வாயில் பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கோப்பெருஞ்சிங்கதேவன் என்ற பல்லவ மன்னனால் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோபுரங்களில் எல்லாம் எண்ணற்ற சிற்ப வடிவங்கள். அகஸ்தியர், திருமூலர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், அக்கினி தேவர், அசுவினி தேவர்களோடு, சந்திரசேகரர், கல்யாண சுந்தரர், பாசுபதர், அர்த்தநாரி, திரிபுராந்தகர், கஜசம்ஹாரர் முதலிய எண்ணற்ற திருக்கோலங்கள் கோபுரத்திலுள்ள மாடங்களில் நிறைந்திருக்கின்றன. எங்கும் காணாத திருக்கோலங்களை யெல்லாம் இங்கே கண்டு மகிழலாம். மேலும் இந்த நான்கு கோபுர வாயில்கள் வழியாகவே, சமய குரவர் நால்வரும் நுழைந்திருக்கிறார்கள் என்பது வரலாறு, கிழக்குக் கோபுர வாயிலாக மணிவாசகரும், தெற்குக் கோபுர வாயிலாக ஞானசம்பந்தரும், மேற்குக் கோபுர வாயிலாக அப்பரும், வடக்குக் கோபுர வாயிலாகச் சுந்தரமூர்த்தியும் நடராஜப் பெருமானை வணங்கி வழிபட எழுந்தருளி யிருக்கிறார்கள். அதனாலேயே கோபுரம், கோபுர வாயில் எல்லாம் புனித மடைந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

கோயிலுக்குள் நுழைந்த பின் எங்கெங்கெல்லாம் செல்ல வேண்டும், எந்தெந்த மூர்த்தியை எல்லாம் தொழ வேண்டும் என்றும் எளிதாகச் சொல்ல முடியாத அளவுக்கு மூர்த்திகளும் சுற்றுக் கோயில்களும், மண்டபங்களும் அங்கே உண்டு. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் முக்குறுணி விநாயகர். மேலைக் கோபுரத்தை அடுத்து கற்பக விநாயகர். இவர் ஏழு திருக்கரங்களோடு கூடிய நர்த்தன கணபதி. இவரே தல விநாயகர். இங்கு சண்முகருக்குத் தனித்ததொரு சந்நிதி இருப்பதோடு, பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் பெரிய தொரு கோயில் வேறே இருக்கிறது. மாறவர்மன் சுந்தர பாண்டியன் கட்டிக் கொடுத்த கோயில் ஆனதால், இவர் பாண்டிய நாயகர் என்ற பெயரோடு விளங்குகிறார்.