பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

103

ஏகாம்பரன்

மன்னன் ராஜ சிம்மனால் கட்டப்பட்டது. அதனால் கல் வெட்டுகளில் ராஜ சிம்மேச்சுரம் என்று காணப்படும். ஊருக்கு மேற்கே ஓர் ஒதுக்குப் புறமான பல்லவ மேடு என்னும் இடத்திலே, அற்புதமான சிற்ப வடிவங்கள் பலவற்றை உள்ளடக்கிக் கொண்டு நிற்கிறது கோயில். கைலைக்கு நிகரான தலம் ஆனதினால், கைலாசநாதர் அங்கே குடி வந்திருக்கிறார், பதினாறு பட்டை போட்ட லிங்கத் திரு உருவில்.

இவரைத் தற்சமயம் வணங்கி விட்டு, விரைவாகவே செல்லலாம் ஏகாம்பரர் கோயிலுக்கு. சென்னையிலிருந்து பங்களுர் செல்பவர்கள் கண்ணில், சென்னை யிலிருந்து அறுபதாவது கிலோ மீட்டர் கல் பக்கம் Temple view என்று எழுதப் பட்டுச் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு பலகை தென்படும். அதுவரையில் குனிந்தே சென்றிருந்தாலும், அங்கு நிமிர்ந்து பார்த்தால், ஒரு பெரிய கோபுரம் வானுற வளர்ந்து நிற்பதைக் காணலாம். அந்தக் கோபுரத்தைக் குறிக்கோளாக வைத்துக் கொண்டு காஞ்சிக்கு வரலாம். கச்சி ஏகம்பன் கோயில் ராஜ கோபுர வாயிலின் வழியாக நுழையலாம். இக்கோபுரவாயில் தென்திசையில் இருந்தாலும் கோயிலில் உள்ள மூர்த்தி கிழக்கு நோக்கியவராகத்தான் இருக்கிறார்.