பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவருடைய தமிழைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உணர்ந்ததை உணர்ந்தபடி எல்லாம் தமிழில் எடுத்துக் கூறும் சித்து அவருக்குக் கை வந்திருக்கிறது. 'கல்கி' ரா. கிருஷ்ணமூர்த்திக்குப் பின் தமிழை இப்படிச் சுகமாகக் கையாளுபவர் தொண்டைமான்தான் என்று இன்று பல அன்பர்கள் கருதுகிறார்கள்.

அவருடைய தமிழ் நடை, முதலிலிருந்து கடைசிவரை துள்ளி விளையாடிக்கொண்டே செல்கிறது. பம்முவதும், பாய்ச்சல் காட்டுவதும், கர்ணங்கள் போடுவதும், பல்டி அடிப்பதும், ஹாஸ்யங்களை உதிர்ப்பதும், பக்தி வெள்ளத்தில் வாசகர்களை முக்கி முக்கி எடுப்பதுமாக இந்தப் 'பாஸ்கரத் தமிழ்' செய்கிற ஜால வித்தைகள் பலப்பல.

ஆசாமி பொல்லாதவர். விளையாட்டுப் போக்கிலேயே பல அரிய உணர்ச்சிகளைப் புகட்டுகிறார்; மேனி சிலிர்க்கச் செய்கிறார்; புராணக் கதைகளைப் பக்தியோடு சொல்கிறார்; அதே மூச்சிலேயே புராணங்களுக்குப் பகுத்தறிவு முலாமும் பூசுகிறார்.

கட்டுரைகள் ஸ்தலங்களுக்கு வழி காட்டிகளாக அமைந்திருக்கின்றன. அதோடு நின்று விடவில்லை. அவை வரலாற்று ஆராய்ச்சி செய்கின்றன; கல்வெட்டுகளின் நுணுக்கங்களைக் காட்டுகின்றன; பக்திப் பாடல்களுக்கு இலக்கிய விளக்கம் கொடுக்கின்றன; சிற்பக் கலையின் அழகுகளை எடை போடுகின்றன; மூர்த்திகளை அவனிருக்கும் வண்ணத்திலேயே எடுத்துக் காட்டுகின்றன.

நூலைத் தொட்ட தொட்ட இடமெல்லாம் கற்பூர வாசனை வீசுகிறது. சந்தனமும் ஜவ்வாதும் மணக்கிறது. மூர்த்தி, தலம்,