பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

131

இந்தத் தலத்தைக் காணச் சென்னையிலிருந்து நேரேயே போகலாம். சென்னை - பங்களூர்ப் பாதையில் ஸ்ரீ பெரும்புதூருக்கு வடக்கே ஐந்தாறு மைல் தொலைவிலே, செம்பரம்பாக்கம் ஏரியைக் கடந்ததும், ஒரு பாதை திரும்பும் மேற்கு நோக்கி. அந்தப் பாதையில் கண்ணை மூடிக் கொண்டு காரை ஓட்டினால், நேரே தக்கோலமே சென்று சேரலாம்.

இல்லை, ரயில் பயணமே வசதி என்றால், அரக்கோணம் போய், அங்கிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில் ஏறி, நான்கைந்து மைல் சென்றதுமே, தக்கோலம் என்ற ஸ்டேஷன் வரும். அந்த ஸ்டேஷனுக்கும், தக்கோலத்துக்கும் நான்கு மைல். ஸ்டேஷனில் வண்டி கிடைப்பதெல்லாம் அருமை. காலிலே வலு இருந்தால் நடந்தே செல்லலாம் கிழக்கு நோக்கி.

ஊருக்குக் கீழ்த் திசையில் விருத்த க்ஷீர நதி என்னும் கல்லாறு ஓடுகிறது. அந்தக் கல்லாற்றின் கரையிலேயே இருக்கிறது கோயில்கள் இரண்டும். வடபக்கம் இருப்பது கங்காதரர் கோயில். கோயில், மண்டபத்தின் விதானம் எல்லாம் தாழ்ந்தே இருக்கும். நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை எல்லாம் அங்கே பலிக்காது. ஆதலால் கங்காதரரை நன்றாகத் தலை தாழ்த்தியே வலம் வர வேணும். கொஞ்சம் பயமாய்க்கூட இருக்கும்,