பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

159

ஏற்பட்ட வடு இன்றும் இருக்கிறது, அவரது திருவுருவில்.

இங்குள்ள இறைவியின் திருநாமம் கொடி இடை நாயகி. முல்லைக் கொடியின் அடியில் இருந்த இறைவன் வெளிவந்த போது, அவனைக் கொழு கொம்பாகச் சுற்றி நிற்கும் அம்மையைக் கொடி இடையாள் என்று சொல்வது எவ்வளவு பொருத்தம்!

கோயில் நிரம்பப் பழைய கோயில் என்பதற்குக் கோயிலின் பிரதான வாயிலை நோக்கி இருக்கும் விநாயகர் சந்நிதியை அலங்கரிக்கும் இரண்டு சிம்மத் தூண்கள் சான்று பகரும். பல்லவர் கோயில்களில் காணும் சிம்மத் தூண்கள் இங்கே கிடந்திருக்கின்றன. அவற்றை வைத்தே இச்சிறு கோயில் உருவாக்கப்பட்டிருக்குமெனத் தோன்றுகிறது.

இந்தக் கோயிலின் விமானத்திலே ஒரு பளிங்கு விநாயகர் வலம் சுழித்த தும்பிக்கையுடன் இருக்கிறார். ஓர் அடிக்கும் குறைவான உயரமே உடையவர் அவர். எங்கேயோ பூனாப் பக்கத்திலிருந்து வந்தவர் இவர் என்று தோன்றுகிறது.

இந்தத் திருக்கோயில் அமைப்பெல்லாம் அழகாக இருந்தாலும், சென்று காண்பவ்ர்களுக்கு ஓர் ஏமாற்றம் இருக்கவே செய்யும். முல்லைக் காடாக இருந்த இடம் இது என்றும், முல்லைக் கொடிதடுத்து நிறுத்தியது தொண்டைமான் சக்கரவர்த்தியை என்றும், ஒன்றுக்கு மூன்றாகக் கதைகள் உருவாகியிருக்க, இன்று கோயிலுக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ மருந்துக்குக்கூட ஒரு முல்லைக் கொடியைக் காணோம்.

அரளியை எல்லாம் வைத்து வளர்த்திருக்கும் கோயில் நிர்வாகிகள் முல்லைக் கொடியை மட்டும் வைத்து வளர்க்க மறந்ததன் காரணம் என்னவோ? முல்லை வன நாதராம் மாசில்லாமணி ஈசுவரரையும் கொடியிடைநாயகியையும்தான் கேட்க வேண்டும்.