பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

177

பாட்டே பாட, திருமங்கை ஆழ்வார், 'பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர்முன் நின்றானை' மட்டும் பாடவில்லை. சிற்றவை பணியால் முடிதுறந்து இளவண வதம் முடித்த இராவணாந்தகனையுமே பாடுகிறார். இதோடு விடுகிறாரா?

பிள்ளையைக் கீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை எயிற்று அனல்விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை
திருவல்லிக்கேணி கண்டேனே!

என்று அழகிய சிங்கரையுமே பாடுகிறார். (இத்தெள்ளிய சிங்கமே துளசிங்கராக இன்று மக்கள் நாவில் வழங்குகிறார் ) 'ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து ஆழி தொட்ட கஜேந்திர வரதனே' தென்னன் தொண்டையர்கோன் செய்த நன்மயிலைத் திருவல்லிக்கேணியில் நிற்கிறான் என்றும் அறுதியிட்டுரைப்பார்.

ஆழ்வார் கண்ட அல்லிக்கேணியான் அழகன், அமுதன், ஆதியான் என்பதை யெல்லாம் அறிகின்றபோது, நாமும் அவனைச் சென்று தொழுது, அவனது கீதோபதேசத்தைக் கேட்டு, வீடு பெறலாகும் அல்லவா என்றே நினைக்கத் தோன்றுகிறது, எனக்கு,

வே-கு : 12