பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

வேங்கடம் முதல் குமரி வரை

நிற்கிறாள். சிசுபாலனை மணக்க இருந்த அவளை அவள் விருப்பப்படியே சகோதரர் பலராமன் சாத்தகி முதலியவர்கள் துணைகொண்டு தேரில் தூக்கிக் கொண்டு வந்து மணம் புரிந்து கொண்டவன் அல்லவா, கண்ணன். ஆதலால் இத்தலத்திலே ருக்மிணி கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெறுகிறது.

மூல மூர்த்திக்கு முன்னால் உற்சவ மூர்த்தமாக நிற்பவனையே பார்த்தசாரதி என்கிறார்கள். இவர் ஸ்ரீ தேவி பூதேவி என்ற உபய நாச்சிமார்களோடேயே எழுந்தருளி யிருக்கிறார். கண்ணன் என்னும் கருந் தெய்வம் என்பதற்கேற்ப, நல்ல கரிய திருமுக மண்டலம். நல்ல வசீகரமான திருமேனி. முகத்தில் எல்லாம் போரில் ஏற்பட்ட வடுக்கள். ஆடை அணிகலன்களைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். எல்லாம் ஒரே வைர மயம். உத்சவர் கரத்தில் தேரோட்டுவதற்கு உரிய சாட்டை உண்டு என்பார்கள். அதை யெல்லாம் நகைகள் மறைத்து விடும்.

மூலவர் இடையிலே யிருந்து ஒரு கத்தி தொங்கும். 'பார்த்தனுக்குத் தேரோட்டும் போது ஆயுதமே எடுப்பதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தானே, அப்படி இருக்கக் கத்தியை இடையில் செருகி இருப்பது சரிதானா?' என்று எண்ணுவோம் நாம்.

இதற்குக் கீதாசாரியனாய் ஞானயோகத்தை விளக்கும் போது, 'அஞ்ஞானம் வேர் ஊன்றிய நெஞ்சில் எழும் ஐயங்களை ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள், பார்த்த! எழுந்து நில்!' என்று பார்த்தசாரதி சொன்னானே, அந்த ஞானவாளே இடையில் இருப்பது என்று கொண்டால், நம் சந்தேகமும் நீங்குந்தானே.

அந்த அல்லிக்கேணி நிற்கும் அமுதனைப் பேயாழ்வாரும், திருமழிசை ஆழ்வாரும், திருமங்கை மன்னனும் பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். முன்னவர் இருவரும் ஆளுக்கு ஒரு