பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

35

முருகா!' என்னும் நம் பஜனையில் மக்கள் மாத்திரம் அல்ல, ரயிலும், ரயில் தண்டவாளங்களும் சேர்ந்து கொள்கின்றன. இந்த ரயில் வருவதை எதிர்நோக்கி முன்னமேயே லக்ஷக் கணக்கான மக்கள், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள் எல்லாம் காரிலும் பஸ்ஸிலும் ஏறித் திருத்தணி வந்து சேர்ந்து விடுகிறார்கள்.

எல்லோருமாகச் சேர்ந்து, பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் தணிகைக் குமரன் கோயில் கொண்டிருக்கும் மலை மீது ஏறுகிறார்கள். அழகாகக் கட்டி வைத்திருக்கும் முந்நூற்று அறுபத்து ஐந்து படிகளையும் ஏறிக் கடந்து, அவன் சந்நிதி சென்று விழுந்து வணங்கி எழுந்து திரும்புகின்றார்கள்.

ஆங்கில ஆட்சி நம் நாட்டில் இருந்த காலத்தில், ஒவ்வொரு வருஷம் ஜனவரி மாதப் பிறப்பன்று அதிகாரிகளான துரைமாரைச் சென்று கண்டு வணக்கம் செலுத்துவது என்பது, நம் மக்களிடையே ஏற்பட்ட ஒரு சம்பிரதாயம். 'வருஷம் பிறந்ததும் இந்தப் பறங்கியர் முகத்திலே முதல் முதல் விழிக்க வேண்டியிருக்கிறதே, இதைத் தடுக்க முடியாதா?' என்று எண்ணியிருக்கிறார், ஒரு பக்தர்.

டிசம்பர் முப்பத்து ஒன்று மாலை திருத்தணிகை சென்று, வருஷம் பிறந்ததும், முருகன் திருவடிகளிலே விழுந்து வணங்கிய பின், ஊர் திரும்பி, அதன் பின் துரைமாரையும் சம்பிரதாயம் தவறாமல் தரிசிக்கலாமே என்று தோன்றியிருக்கிறது. அவருக்கு. அதனால்தான் இந்தத் திருத்தணி திருப்படித் திருவிழா ஆரம்பமா யிருக்கிறது.

அதோடு வருஷம் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களும் செய்த அக்கிரமங்களுக்குப் பிராயச்சித்தம் தேடுவது போல், 365 படிகளையும் ஏறிக் கடந்து முருகன் திருவடிகளிலே பாவச் சுமையை இறக்கி வைத்து விட்டு, நல்ல மனத்தோடு வீடு திரும்பும் மன நிறைவும் பெறலாம் அல்லவா என்று தோன்றுகிறது, எனக்கு.