பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

63

துயர் துடைக்க நந்தியை இறைவன் ஏவ, அன்று அவ்வசுரனைத் துரத்திச் சென்ற நந்தி திரும்பாமலேயே இருக்கிறது என்கிறார்கள்.

பசுவாகிய உயிர்கள் என்றுமே இறைவனை விட்டு ஓடத்தான் செய்கின்றன. ஆனால் இறைவனோ அந்த உயிர்களுக்கு அருள் புரிய, அவ்வுயிர்களைத் துரத்திக் கொண்டே ஓடி வருகிறார் என்பது இறைவனின் அளப்பரிய கருணையை விளக்கும் ஒரு தத்துவம். அந்த தத்துவத்தையே அருள் வேட்டை (Hound of Heaven) என்ற பாட்டிலே பிரான்சிஸ் தாம்ஸன் என்ற மேலை நாட்டுக் கவிஞன் விளக்குகிறான். திருவலத்தில் உள்ள வல்லநாதரும் தம்முடைய நந்தியை, உயிர்கள் ஓடும் பக்கமாக விரட்டுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது, எனக்கு.

வல்லம் என்ற சொல் அரசனுடைய ஊரைக் குறிக்கும். என்பர், ஊரையும் பேரையும் ஆராய்ச்சி செய்தவர்கள். இந்தத் திருவல்லத்தில் வாணர்குல மன்னர்களுக்கு உரிய கோட்டை ஒன்று இருந்தது என்றும், அது ஒரு பெரிய படைவீடாய்ப் பத்தாம் நூற்றாண்டில் விளங்கியது என்றும், ஒரு சாஸனம் கூறுகிறது. ஆனால் இந்தக் கோட்டையோ, கோட்டை இருந்த அடையாளமோ ஒன்றும் இன்று நமக்குத் தென்படுவதில்லை.

பரவாயில்லை. சாஸனம் கூறுவதை நம்பலாந்தானே. பொன்னியின் செல்வனாம் ராஜ ராஜனது துணைவனாய்ப் பல போர்க்களங்களில் விழுப்புண் பெற்று, ராஜராஜனது தமக்கை குந்தவையை மணம் புரிந்த வல்லவரையன் வந்தியத் தேவன் இந்த ஊர்க்காரனே என்று அறிகிறபோது, 'ஓ! அவனா? நமக்கு நன்கு அறிமுகம் ஆனவன் ஆயிற்றே!' என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா?