பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வேங்கடம் முதல் குமரி வரை

சவாரி செய்யும் நிலையை எந்தச் சிற்பியும் தமிழ் நாட்டில் உருவாக்கக் காணோம்.

வலம் வந்த விநாயகரை வணங்கிவிட்டு, வல்லநாதரையும் வல்லாம்பிகையையும் வணங்கலாம். சிலை வடிவிலே அமைந்திருக்கும் அவர்களது! கோலத்தில் சிறப்பான அம்சம் ஒன்றும் இல்லைதான். என்றாலும் செப்புச் சிலை வடிவில் இருக்கும் அவர்களது திரு உருவம் கண்டு மகிழத்தக்கது. சாதாரணமாக எல்லாக் கோயில்களிலும் இருக்கும் சந்திரசேகரைப்போலவே தான் வல்லநாதர் இருக்கிறார். அவர் பக்கலில் எழிலே உருவெடுத்தாலன்ன அழகோடு வல்லாம்பிகை நிற்கிறாள். இருவரையும் நீங்கள் இங்கு உள்ள படத்திலே பார்க்கலாம். நல்ல சோழர் காலத்துச் செப்புச் சிலை போலவே இருக்கின்றன.

இனி, கோயிலை ஒரு சுற்றுச் சுற்றி, வெளியே உள்ள மகாமண்டபத்துக்கு வந்தால், அங்கு ஓர் அதிசயம் காத்திருக்கும். எல்லாச் சிவன் கோயிலிலும் தாம் நந்தியைப் பார்த்திருக்கிறோம். பார்த்த பல கோயில்களிலும் நந்தி இறைவனை நோக்கிய வண்ணமா யிருப்பதையே கண்டிருக்கிறோம். ஆண்டவன் கட்டளைக்கு அடிபணிய எக்கணமும் தயாராயிருப்பது போல, அவர் கடைக்கண் சாடைக்குக் காத்திருப்பது போல, மேற்குத் திசையை நோக்கியிருக்கும் நந்தியைத்தான் மற்றத் தலங்களில் கண்டிருக்கிறோம்.

ஆனால், இத்தலத்தில் மட்டும் நந்தி, சிவபிரானுக்குத் தன் பின் பாகத்தைக் காட்டிக் கொண்டு, கிழக்கு நோக்கிய வண்ணமாக இருக்கிறது. இது காணக் கிடைக்காத ஓர் அதிசயம்தானே? விசாரித்தால் பக்கத்தில் உள்ள வல்லாம்பேட்டை என்னும் மலையில் வாழ்ந்து வந்த கஞ்சாரன் என்னும் அசுரன் இங்கு மக்களை வருத்த, அவர் தம்