பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. சுவாமிமலை சுவாமிநாதன்

சரதச் சக்கவரவர்த்தி அயோத்தியிலிருந்து அரசாள்கிறார். சக்கரவர்த்தித் திருமகனான ராமன் மிதிலை சென்று வில்லொடித்து ஜனகனது மகளாகிய சீதையை மணம் முடித்துத் திரும்புகிறான். வரும் வழியில் எதிர்த்த பரசுராமனது கர்வத்தையும் அடக்கி, வெற்றி காணுகிறான். இதனால் எல்லாம் மகிழ்ச்சியுற்ற தசரதர், தமக்கு வயது முதிர்ந்துவிட்டது என்ற காரணம் காட்டி ராஜ்ய பாரத்தைத் தம் சீமந்த புத்திரனான ராமனிடம் கொடுத்துவிட்டுக் காடு சென்று தவம் செய்ய விரும்புகிறார்.

அதற்காகக் குலகுருவாகிய வசிட்டர், சுமந்திரர் முதலான மந்திரி பிரதானிகளையெல்லாம் அழைத்து அவர்களிடம் கலந்து ஆலோசிக்கிறார். ராமனுக்குப் பட்டம் சூட்டுவதற்கு எல்லாரும் ஏகமனதாகச் சம்மதம் தெரிவிக்கிறார்கள். 'அறத்தின் மூர்த்தியாயிற்றே அவன், மன்னுயிர்க்கு ராமனிற் சிறந்தவர் உண்டோ ?' என்றெல்லாம் பாராட்டுகிறார்கள். இதனைக் கேட்ட தசரதர் பெருமகிழ்ச்சி அடைகிறார், ராமனைப் பெற்ற நாளிலும், அவன் அன்று அரனது வில்லை ஒடித்துத் தன் வீரத்தைக் காட்டிய நாளிலும்,