பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

81

பேறு, மற்றொன்று அத்தலத்தில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் விண்ணகர வாழ்வு, மூன்றாவதாக அத்தலத்தில் எல்லாக் காரியங்களிலும் அக்ரஸ்தானம் தம் பெண்ணாகிய வஞ்சுளவல்லி நாச்சியாருக்கே என்பவை அவை.

நிபந்தனைகளுக்கு எல்லாம் உட்பட்டே நம்பி, நாச்சியாரைத் திருமணம் செய்து கொள்கிறான். அன்று முதல் நறையூர் என்ற பெயர் மங்கி நாச்சியார் கோயில் என்றே விளங்குகிறது அத்தலம். நறையூர் நம்பியும், அன்று முதல் 'ஹென்பெக்ட் ஹஸ்பெண்டாகவே' அத்தலத்தில் வாழ்கிறான்! அந்த நாச்சியார் கோயிலுக்கே இன்று செல்கிறோம் நாம்.

நறையூர் என்னும் இந் நாச்சியார் கோயில் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் ஆறு மைல் தொலைவில் இருக்கிறது. கும்பகோணம் ஸ்டேஷனில் இறங்கினால் வண்டி கிடைக்கும்; பஸ் கிடைக்கும்; ஏன்? கார் வேண்டுமானாலும் கிடைக்கும். செல்பவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றால் கண்ணை மூடிக் கொண்டு நேரே நாச்சியார் கோயிலுக்கே சென்று விடலாம்.

சைவ வைஷ்ணவ வேற்றுமை எல்லாம் நமக்குக் கிடையாது என்று சொல்பவர்கள் இருந்தால் வழியில் உள்ள அரிசிற்கரைப் புத்தூர், நறையூர் சித்தீச்சுரம் என்னும் சிவன் கோயில்களிலும் இறங்கி அங்குள்ள சொர்ணபுரி ஈசுவரர், சித்தநாத ஈசுவரர் இவர்களையும் வணங்கிய பின் மேலே நடக்கலாம். நாராயணன் சிவனை வணங்கிப் பல வரங்களைப் பெற்றான் என்றுதான் சைவர்கள் கதை சொல்வார்கள். இவற்றிற்கெல்லாம் வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார்கள் வைஷ்ணவர்கள், பிரமன் தலையைக் கொய்த சிவபெருமான் கையில் அந்தக் கபாலம் ஒட்டிக்கொள்ள அதைக் களைய, சித்தநாத ஈசுவரர் நறையூர் நம்பியை வணங்கினார் என்பது புராண வரலாறு.