பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

வேங்கடம் முதல் குமரி வரை

யானையின் காலைப் பிடித்து இழுக்கும் முதலை, யானையைக் காக்க வருகின்ற பெருமான், அந்தப் பெருமானைத் 'தூக்கி வருகின்ற கருடன் எல்லோரையும் உருவாக்க வேண்டுமே என்று சிற்பி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கல்லிலே பெரும் பகுதியைப் பெருமானுக்கும் கருடனுக்கும் ஒதுக்கி விடுகிறான். அடித்தளத்தில் ஒரு சிறு இடத்தில் வீறிட்டு அலறும் யானை உருவாகிறது. அந்த யானையின் காலைப் பிடிக்கும் முதலையும், இருக்கிற கொஞ்ச இடத்துக்குள்ளேயே உடலை வளைத்துக் கொண்டு நெளிவதற்கு ஆரம்பித்து விடுகிறது. அவ்வளவுதான்; அதன்பின் பறந்து வருகின்ற கருடன்மேல் ஆரோகணித்து வரும் அந்தப் பெருமானின் கோலம் எல்லாம் உருவாகிவிடுகிறது சிற்பியின் சிற்றுளியால். பெருமான் வருகின்ற வேகம் கூடத் தெரிகிறது கருடனது வரவைச் சித்திரித்திருப்பதிலே.

சங்கு சக்கரம் ஏந்திய கைகள் இரண்டோடு அபய வரத முத்திரைகளோடு இரண்டுகைகள். கருடனது வடிவ அமைப்பே ஒரு கவர்ச்சி; பெருமானது மேனியிலே ஓர் அழகு; எல்லாவற்றையும் அல்லவா சிற்பி செதுக்கியிருக்கிறான். கலைஞனாகிய சிற்பி, யானை, முதலைகளைச் செதுக்குவதிலும் மிக்ககவனமே செலுத்தி யிருக்கிறான், அதனால் தானே உயிருள்ள முதலையையும் வளர்ச்சி குறை யாத யானையையுமே காண்கிறோம் கல்லுருவில். இப்படி அற்புதமாக ஒரே கல்லில் இத்தனையும் உருவாக்கி இருக்கும் சிலையைக் கண்ட்பின்தான், ஒரே நடிகர் அத்தனை கோலங்களிலும் அவர் ஒருவராகவே நடித்தது அதிசயமாகப் படவில்லை. இத்தகைய அற்புதச் சிற்ப வடிவைக் காண விரும்பினால் நீங்கள் செல்லவேண்டுவது திருக்கண்ண மங்கைக்கு அந்தத் திருக்கண்ண மங்கைக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருக்கண்ணமங்கை திருவாரூருக்கு மேற்கே நான்கு, ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. திருவாரூர் ஜங்ஷனில்