பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

வேங்கடம் முதல் குமரி வரை

கோயில்களைப் போல் அல்லாமல் இங்கு முதலில் மீனாக்ஷியைத்தான் வழிபட வேணும். அதன் பின்னர்தான் சுந்தரேசுவரர். மீனாக்ஷிதானே பாண்டிய ராஜகுமாரி, சுந்தரேசர் அவள்தன் நிழலிலேதானே ஒதுங்கி வாழ்கிறார்? அம்மன் கோயில் முகப்பில் அஷ்ட சித்தி மண்டபம். கௌமாரி, ரௌத்திரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, எக்ஞரூபிணி, சாமளை, மகேசுவரி, மனோன்மணி என்று ஆளுக்கொரு தூனை ஆக்கிரமித்துள்ளனர். இவர்களுக்கு இடையிலேதான் பழக்கடைகள் முதலியன.

இதனைக் கடந்து மீனாக்ஷி நாயக்கர் மண்டபம். அதற்கடுத்தது முதலி மண்டபம், குடந்தை முதலியாரால் கட்டப்பட்டது. அங்கு பிக்ஷாடனர், தாருகா வனத்து ரிஷிகள், ரிஷி பத்தினிகள், மோகினி முதலியோரது சிலைகள் இருக்கின்றன. இந்த முதலி மண்டபத்தையும் கடந்து வந்தால் பொற்றாமரைக் குளத்துக்கும், அதைச் சுற்றியமைந்துள்ள மண்டபத்துக்கும் வந்து சேருவோம். பொற்றாமரையை வலம் வந்து கோயிலுள் செல்ல வேணும். பொற்றாமரை என்ற பெயருக்கு ஏற்பத் தங்கத்தால் தாமரை மலர் ஒன்று குளத்தின் நடுவில் இருக்கும். இங்குதான் வள்ளுவரது குறளைச் சங்கப் புலவர்கள் ஏற்றிருக்கின்றனர். ஆதலால் சலவைக் கல்லில் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளும் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சலவைக் கல் பணியும் அந்தப் பொற்றாமரையும், திருப்பனந்தாள் மடத்து அதிபர் அவர்களது கைங்கர்யம்.

பொற்றாமரையை வலம் வந்து கிளிக்கட்டு மண்டபம் வழியாக மீனாக்ஷியம்மன் சந்நிதிக்குச் செல்லவேணும். அங்கு வருவார் எல்லோரும் வசதியாக நின்று காணக் கிராதிகளெல்லாம் போட்டு வைத்திருக்கிறார்கள். கருவறையில் மீனாக்ஷி நிற்கிற கோலம் கண்கொள்ளாக் காட்சி. வலக்கையில் கிளியுடன் கூடிய செண்டு ஒன்று ஏந்தி அவள் நிற்கின்ற ஒயில், மிக்க அழகானது. கருணை பொழியும் கண்கள் படைத்தவள் அல்லவா?? கண்ணை இமையாது மக்களைக் காக்கும் அருள் உடையவள் ஆயிற்றே,