பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

நிபந்தாங்களும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இந்தக் கோயிலில் நிறையக் கல்வெட்டுக்கள் எல்லாம் நல்ல பாடல்களாகவே இருப்பது ஒரு பெருஞ்சிறப்பு, அவற்றில் இரண்டு பாடல்களை முன்னரே பார்த்தோம். அவையே போதும், இங்குள்ள கல்வெட்டுப் பாடல்கள் சிறப்பைக் கூற.

கோயிலை விட்டு வெளியே வரும்போது சிதைந்த கோபுரத்தைக் கண்டதும் இந்தக் கோபுரம் எப்படிச் சிதைந்தது என்று வினவத் தோன்றும். இக்கோபுரம் மிகவும் அவசரம் அவசரமாகக் கட்டப்பட்டது என்றும், அதனால் இதனில் வெடிப்புக் கண்டு நொறுங்கிவிட்டது என்றும், இல்லை, இடி விழுந்து நொறுங்கி விட்டது என்றும் கூறுவர். ஆனால் சௌக்கீ பாதிரியார் 1792ல் எழுதி வைத்த குறிப்பிலிருந்து இக்கோயில் கோபுரமும் அக்கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த நாழிகைக் கடிகாரமும் பழுதடையாதிருந்திருக்கிறது என்று தெரிகிறது. ஆதலால் 1792- க்குட்ட பின்பே-அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தான் இக்கோபுரம் பழுதுற்றிருக்கவேனும், தென்னிந்தியாவில் நவாபுகள் ராஜ்யம் நடந்தபொழுது அவர்கள் தங்கள் ரிகார்டுகளையெல்லாம் இக்கோபுரத்தில் பதனப்படுத்தி வைத்திருந்திருக்கிறார்கள். அந்த ரிகார்டுகளில் எப்படியோ தீப்பிடித்து அது பரவிக் கோபுரத்தின் மேல் தட்டுகள் எல்லாம் அழிந்திருக்கிறது என்பது ஒரு வரலாறு. எது எப்படியிருந்தாலும், யார் வைத்த தீயோ வீடு வெந்து போயிற்று. ஓங்கு நிலை ஒன்பதோடு உற்ற திருக்கோபுரம் சிதைந்து விட்டது. இதனை நேராகவே திருத்திப் புரப்பார்தமை எதிர் நோக்கித்தான் பராக்கிரம பாண்டியன் அன்றே விழுந்து வணங்கியிருக்கிறான். அப்படி அவன் எதிர்நோக்கிய பெருமகன் எந்த வடிவில் என்று வரப்போகிறானோ என்பதைத் தானே தமிழ் உலகம் எதிர்நோக்கி நிற்கிறது!