பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

179

இயம்பி இசையுடன் வாழ்கிறார். அதனா லேயே தமிழை ‘அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு' என்று போற்றுகிறார்கள் புலவர்கள்.

இறைவன் வாக்களித்தபடியே அகத்தியர் தங்கியிருந்த பொதிசைக்கே வருகிறார். இறைவன் இறைவியாம் உமையையும் அழைத்துக்கொண்டு, தம் திருமணக் கோலத்தையும் காட்டி அவரை மகிழ்விக்கிறார். இத் திருமணக்கோலம் காட்டிய வரலாற்றைத் தென் தமிழ் நாட்டில் உள்ள பல கோயில்களில் கேட்டிருக்கிறோம். என்றாலும் சிறப்பாக இத்தலத்தில்தான் இறைவன் காட்டியிருக்கவேண்டும். இங்குதானே அகத்தியர் தங்கியிருக்கிறார். இத்தனை விவரமும் தெரிந்துகொண்ட பின் கோயிலுக்குள் நுழையலாம். கோயில் நிரம்பப் பெரிய கோயிலும் அல்ல, சிறிய கோயிலும் அல்ல. கோயில் வாயிலில் பொருநை நதி ஓடுகிறது. அங்கு ஒரு சிறு மண்டபம் இருக்கிறது. அங்கு சென்றால் ஆயிரக்கணக்கான மீன்கள் துள்ளி விளையாடுவதைக் காணலாம், பொரியோ, கடலையோ வாங்கிப் போட்டு அம்மீன் விளையாட்டைப் பார்த்தபின் கோயிலுக்குள் நுழையலாம்.

கோயில் வாயிலில் ஒரு கோபுரம், கோயிலுக்கு ஒரு பெரிய மதில், இந்த மதிலுக்குள்ளே ஒரு பிராகாரம். அந்தப் பிராகாரத்தின் மேல் பக்கத்திலே ஒரு களாமரம் மூன்று கவடுகளோடு நிற்கிறது. அந்தக் களாமரத்தடியிலேதான் இறைவன் லிங்கத்திருவுருவில் எழுந்தருளியிருக்கிறார். அதனால் அவர் முக்களாலிங்கர் என்ற பெயரும் பெற்றிருக்கிறார். நந்தி மண்டபம், மகா மண்டபம் எல்லாம் கடந்து சென்று, கருவறையில் உள்ள லிங்கத் திருவுருவைக் கண்டு வணங்கலாம் அவரை வணங்கிய பின் வெளியே வந்து பிராகாரத்தைச் சுற்றினால் கன்னி மூலையிலுள்ள உத்சவமூர்த்தியைக் காணலாம். இவர் சோமாஸ்கந்த வடிவினரே. மற்றக் கோயில்களில் காணும் சோமாஸ்கந்த வடிவத்துக்கும் இங்குள்ள வடிவத்துக்கும் அதிக வித்தியாசம் ஒன்றுமே இல்லை தான்.

அதனை அடுத்த ஒரு சிறு மண்டபத்திலே உயர்ந்த பீடத்தின் மேலே ரிஷபாரூடராய் இறைவனும் இறைவியும் திருமணக்